‘கபா’ கோட்டை தகர்ப்பு: பிரிஸ்பேனில் இந்தியா வரலாற்று சாதனை; ஆஸி.யின் 32 ஆண்டு ஆதிக்கத்துக்கு ஆப்பு!; பார்டர் - கவாஸ்கர் டிராபி தக்கவைப்பு; சாதித்தது இளம் படை

தினகரன்  தினகரன்
‘கபா’ கோட்டை தகர்ப்பு: பிரிஸ்பேனில் இந்தியா வரலாற்று சாதனை; ஆஸி.யின் 32 ஆண்டு ஆதிக்கத்துக்கு ஆப்பு!; பார்டர்  கவாஸ்கர் டிராபி தக்கவைப்பு; சாதித்தது இளம் படை

நம்ப முடியவில்லை... கான்பது கனவா? நனவா? என்று தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்! கடந்த 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் இரும்புக் கோட்டையாக விளங்கிய பிரிஸ்பேன் கபா மைதானத்தில், இந்திய அணி வெற்றிக் கொடி கட்டும் என்பதை கணித்தவர்கள்... இல்லை எதிர்பார்த்தவர்கள் கூட இருக்க முடியாது என்று அடித்துச் சொல்லலாம். வாடா... கபா வந்து விளையாடிப் பாருடா என்று சிட்னியிலேயே வாய்ச்சவடாலை காட்டி வம்புக்கிழுத்த ஆஸி. கேப்டன் பெய்ன் வாயடைத்துப் போயிருக்கிறார்.நான்காவது நாள் ஆட்டத்தில் சிராஜ், தாகூரின் அற்புதமான வேகப் பந்துவீச்சில் ஆஸி. அணி 294 ரன்னுக்கு அடங்கியபோது கூட வெற்றி நம்பிக்கை உதிக்கவில்லை. கடைசி நாள் ஆட்டத்தில் 324 ரன் எடுப்பதெல்லாம் தலைகீழாக நின்றால் கூட நடக்காது என்பதே பேச்சாக இருந்தது. இந்த புள்ளி விவரங்கள், அவநம்பிக்கை அளிக்கும் எதிர்மறை எண்ணங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, ரகானே தலைமையிலான இந்திய இளம் படை நேற்று இமாலய இலக்கை நோக்கி துரத்தலை தொடங்கியது.ஹிட்மேன் 7 ரன் எடுத்து ஜகா வாங்கினாலும், கில் - புஜாரா இணைந்து ஆஸி. தாக்குதலை ஒரு கை பார்த்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்தது, இந்திய ரசிகர்களை சற்று நிமிர்ந்து உட்கார வைத்தது. சதத்தை நோக்கி வீறுநடை போட்ட கில் துரதிர்ஷ்டவசமாக 91 ரன்னில் (146 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற, துடிப்புடன் அடித்து விளையாடிய கேப்டன் ரகானே 24 ரன் எடுத்து (22 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். அடுத்து புஜாராவுடன் இணைந்தார் பன்ட். ஆஸி. வேகங்களின் ‘பாடி லைன்’ தாக்குதலால் உடல் முழுவதும் புண்ணாகிய நிலையிலும், மலை போல நின்று விக்கெட்டை பாதுகாத்தார் புஜாரா. மறு முனையில் பன்ட் தனது இயல்பான அதிரடியை வெளிப்படுத்த, இலக்கு நெருங்க ஆரம்பித்தது. ஆஸி. வீரர்களின் முகத்தில் இனம் புரியாத கலக்கம். இருவரும் அரை சதம் அடித்து அசத்த, எதிரணியின் கலக்கம் பதற்றமாக மாறியது. புஜாரா 56 ரன் (211 பந்து, 7 பவுண்டரி), அகர்வால் 7 ரன் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் வெளியேற, ஆஸி. வீரர்கள் கொக்கரித்தனர்.ஆனாலும் அசரவில்லை இந்திய இளம் படை! பன்ட்டுடன் இணைந்து சுந்தரும் அதிரடியில் இறங்க, வெற்றிக் கோடு கூப்பிடு தூரத்தில். சுந்தர் 22 ரன் (29 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), தாகூர் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தாலும், கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத பன்ட் அமர்க்களமான பவுண்டரியுடன் அந்த ‘வியத்தகு சம்பவத்தை’ நிகழ்த்திக் காட்டினார். ஆம்... இந்தியா 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 329 ரன் எடுத்து நம்ப முடியாத வரலாற்று சாதனையை பிரிஸ்பேன் அரங்கில் அரங்கேற்ற, ஆஸி. வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். எல்லைக் கோட்டருகே காத்திருந்த இந்தியப் படை களத்துக்குள்ளே ஊடுருவி 89 ரன்னுடன் (138 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்த மாவீரன் பன்ட்டை ஆரத்தழுவி ஆர்ப்பரித்தது.கேலரியில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கை தட்டி வாழ்த்துகளைத் தெரிவிக்க, இந்திய அணியினர் தேசியக் கொடியுடன் மைதானத்தை வலம் வந்தனர். ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்து நடந்த டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியிருக்கிறது. குறிப்பாக, அடிலெய்டு டெஸ்டின் 2வது இன்னிங்சில் 36 ரன்னுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தபோது எழுந்த மிக மோசமான விமர்சனங்களையும், 0-4 என ஒயிட் வாஷ் ஆகும் என்ற கணிப்புகளையும் புறந்தள்ளி புதிய வரலாற்றை படைத்திருக்கிறது. ஆட்ட நாயகனாக ரிஷப் பன்ட், தொடர் நாயகனாக ஆஸி. வேகம் கம்மின்ஸ் விருது பெற்றனர். கேப்டன் கோஹ்லி சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியது, முன்னணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக காயம் அடைந்தது போன்ற பல பின்னடைவுகளையும் மீறி சாதித்துள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. ஆஸ்திரேலிய சவாலை முறியடித்து நாடு திரும்பும் இந்திய அணி, அடுத்து சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளன. * ரூ.5 கோடி போனஸ்ஆஸி.க்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை தக்கவைத்துள்ள இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு மழை குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கு ₹5 கோடி போனசாக வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.* பிரதமர் வாழ்த்துபிரிஸ்பேன் டெஸ்டில் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். விளையாட்டு, அரசியல், திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத் தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.* தோற்காத கேப்டன்முதல் டெஸ்ட் போட்டியுடன் கோஹ்லி விடைபெற இந்தியா அவ்வளவுதான் என்ற விமர்சனம் கிளம்பியது. அதிலும் ஆஸி முன்னாள் வீரர்கள் அதை அடிக்கடி சொல்லி இந்திய வீரர்களின் மன உறுதியை குலைக்க முயற்சித்தனர். கோஹ்லி இருந்த முதல் போட்டியில் தோல்வி கிடைத்த நிலையில், அடுத்த 3 போட்டிகளில் 2ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் செய்து இந்தியா தொடரை கைப்பற்றியது. ரகானே தற்காலிகமாக கேப்டன் பொறுப்பை ஏற்றாலும், இதுவரை கேப்டனாக செயல்பட்ட 5 போட்டியிலும் தோற்றதில்லை என்ற பெருமையை தக்கவைத்துள்ளார் (4 வெற்றி,1 டிரா).* ரிஷப் 1000... டோனியை முந்தினார்!ரிஷப் 61வது ஓவரில் கம்மின்ஸ் பந்தில் ஒரு ரன் எடுத்தபோது, டெஸ்டில் விரைவாக 1000 ரன் எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார் (27 இன்னிங்ஸ்). டோனி 32 இன்னிங்சிலும், ஃபரூக் என்ஜினியர் (36), சாஹா (37), மோங்கியா 39 இன்னிங்சிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.* பொறுமையின் சிகரம் புஜாராஅரைசதம் அடிக்க, புஜாரா அதிக பந்துகள் விளையாடிய போட்டியாக பிரிஸ்பேன் டெஸ்ட் அமைந்து விட்டது (196 பந்து). களில் அரைசதத்தை எட்டினார். சிட்னியில் நடந்த 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 174 பந்துகளிலும், 2017-18ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 173 பந்துகளிலும், சிட்னி டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் 170 பந்துகளிலும் அவர் அரைசதம் அடித்துள்ளார். அவரது பொறுப்பான ஆட்டம் இந்தியாவின் வெற்றி, டிராவுக்கு உதவி உள்ளது.* நடராஜனிடம் கோப்பைஆஸி. தொடரில் அறிமுகமான நடராஜன் ரசிகர்களை மட்டுமல்ல சக வீரர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளார். டி20 தொடரை வென்றதும், அதற்கான கோப்பையை பெற்ற கோஹ்லி அதை முதலில் நடராஜனிடம்தான் தந்தார். அதேபோல் சிறந்த வீரருக்கான விருது பெற்ற ஹர்திக் பாண்டியாவும் தனது விருதுகளை நடராஜனிடம் தந்து அழகு பார்த்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று டெஸ்ட் கேப்டன் ரகானேவும், பார்டர்-காவஸ்கர் கோப்பையை நடராஜனிடம்தான் முதலில் தந்தார். * சூப்பர் சேஸ்...இப்போட்டியில் இந்தியா 328 ரன்னை வெற்றிகரமாக சேஸ் செய்தது, ஆஸி. மண்ணில் இந்தியாவின் அதிகபட்சமாக அமைந்தது. 2008-09ல் தென் ஆப்ரிக்கா 414 ரன்னையும், 1928-29ல் இங்கிலாந்து 332 ரன்னையும் சேஸ் செய்து ஆஸி.யை வீழ்த்தியுள்ளன. இது இந்தியாவுக்கு 3வது சிறந்த ரன் சேஸாகும். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 1975-76ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் 406 ரன்னும், இங்கிலாந்துக்கு எதிராக 2008-09ல் சென்னையில் 387 ரன்னும் சேஸ் செய்து வென்றுள்ளது.* முடிந்தது ஆதிக்கம்பிரிஸ்பேனில் 32 ஆண்டுகளாக தோற்றதில்லை என்ற பெருமையை ஆஸி. அணி இழந்துள்ளது. இங்கு தொடர்ந்து 31 டெஸ்ட்களில் வென்ற ஆஸி.யின் சாதனையை முடிவுக்கு கொண்டு வந்த இந்தியா, ஏற்கனவே தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வென்றதையும், 19 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வென்றதையும் முடிவுக்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை