கவர்னர் மாளிகை முன் முதல்வர் தர்ணா

தினமலர்  தினமலர்
கவர்னர் மாளிகை முன் முதல்வர் தர்ணா

புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் மாளிகை முன் அமைச்சர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அமைச்சருக்கு ஆதரவாக முதல்வரும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் தொகுதி
மேம்பாட்டு பணிகளுக்கு ஒப்புதல் தர கோரி கடந்த 10ம் தேதி முதல் சட்டசபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். நேற்று 10வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.காலை 10:30 மணிக்கு அமைச்சர் கந்தசாமி கவர்னர் மாளிகைக்கு காரில் சென்றார். கவர்னரை சந்திக்க அனுமதிக்குமாறு போலீசாரிடம் கேட்டார். கவர்னர் நேரம் ஒதுக்காததால் அனுமதியில்லை
என சீனியர் எஸ்.பி. பிரதிக் ஷா கோத்ரா கூறியதால் கவர்னர் மாளிகை முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தகவலறிந்த முதல்வர் நாராயணசாமி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. க்கள் சிலர் கவர்னர் மாளிகை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் முதல்வர் அமைச்சர் எம்.எல்.ஏ. க்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கவர்னர் மாளிகைக்குள் செல்ல அனுமதி கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் காங். கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.'கவர்னரின் செயல்பாடுகள் குறித்து புகார் அளிக்க ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளேன். எனவே போராட்டத்தை கைவிடுங்கள்' என முதல்வர் நாராயணசாமி அழைத்தார். இதை ஏற்று அமைச்சர் கந்தசாமி போராட்டத்தை கைவிட்டு முதல்வருடன் புறப்பட்டு சென்றார்.

மூலக்கதை