ஆட்சி இருக்குமா: ஸ்டாலின் கேள்வி

தினமலர்  தினமலர்
ஆட்சி இருக்குமா: ஸ்டாலின் கேள்வி

பள்ளிபாளையம் :''சசிகலா வெளியே வந்த உடனே, இந்த ஆட்சி இருக்கா, இல்லையா என்பது தெரிந்து விடும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பாதரையில், தி.மு.க.,வின், மக்கள் சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஸ்டாலின் பேசியதாவது:
குமாரபாளையம் சட்டசபை தொகுதியில், விசைத்தறி, கைத்தறி தொழில்கள் அதிகம் உள்ளன. மின்துறை அமைச்சர் தங்கமணி இருக்கும் தொகுதி. இங்கு, கந்து வட்டி கொடுமையால், இரண்டு ஆண்டுகளில், நான்கு பேர் தற்கொலை செய்து உள்ளனர். விசைத்தறி தொழிலுக்கு பயன்படும் நுால் விலை உயர்வால், தொழில் நலிவடைந்து விட்டது.

முதல்வர் இ.பி.எஸ்., விவசாய பிரச்னைகளுக்காகவும், 'நீட்' பிரச்னைக்காகவும், பிரதமரை சந்திக்கவில்லை. வரும், 27ல், சசிகலா வெளியே வருகிறார். அவர் வந்தவுடன், இ.பி.எஸ்.,சுக்கு ஆபத்து. அந்த ஆபத்தில் இருந்து, தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பிரதமரை சந்தித்துள்ளார். சசிகலா வெளியே வந்த உடனே, இந்த ஆட்சி இருக்கா, இல்லையா என்பது தெரிந்து விடும். இந்த நிலையில் தான், அ.தி.மு.க., ஆட்சி நடந்து வருகிறது.
அதனால், தி.மு.க.,வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

தொகுதிக்கு ஒன்றுமே செய்யாத அமைச்சர்




புதுக்கோட்டை புதுக்கோட்டை, விராலிமலையில் தி.மு.க., சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:

லோக்சபா தேர்தலுக்கு முன், 12,600 இடங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தினோம். அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க., பெற்றது. அதேபோல் சட்டசபைத் தேர்தலிலும் தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி. தமிழக உள்ளாட்சி துறை தற்போது, ஊழலாட்சி துறையாக மாறிவிட்டது. இந்நிலையில்தான் உங்கள் பிரச்னைகளை கேட்க நான் வந்திருக்கிறேன். புதுக்கோட்டையை தனி மாவட்டமாக அறிவித்தது கருணாநிதி தான். 22 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த விராலிமலை சுப்பிரமணியசாமி கோவில் தேரை ஓடவைத்தவர் கருணாநிதி.

பத்து ஆண்டாக இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் உள்ள விஜயபாஸ்கர், இந்த தொகுதிக்கு என்ன திட்டம் கொண்டு வந்துள்ளார். தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர், இங்குள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த எந்த முயற்சியும் செய்யவில்லை. அரசு கல்லுாரி கொண்டு வரவில்லை. முகக்கவசம் தொடங்கி, பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிப்பான் என, எல்லவாற்றிலும் ஊழல் செய்துள்ளனர். இந்த அரசு விலைவாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை அறிய அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் இன்னும் விசாரணை நடத்தி முடிக்கவில்லை. துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கு, 8 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஒருமுறை கூட விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகவில்லை. ஜெயலலிதா பெயரில் ஆட்சி செய்வதாக கூறும் இவர்கள், அவர் இறப்புக்கான காரணம் பற்றி கவலைப்படவே இல்லை.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மூலக்கதை