ரிசர்வ் வங்கியை விட பெரிதா கூகுள்? குமுறும் ஆன்லைன் கடன் நிறுவனங்கள்!

தினமலர்  தினமலர்
ரிசர்வ் வங்கியை விட பெரிதா கூகுள்? குமுறும் ஆன்லைன் கடன் நிறுவனங்கள்!

புதுடில்லி:கூகுள் நிறுவனம், ரிசர்வ் வங்கியை விட தன்னை, ‘சூப்பர்’ கட்டுப்பாட்டாளராக நினைத்து செயல்படுகிறது என, ஆன்லைனில் கடன் வழங்கும் நிறுவனங்கள் குற்றம்சாட்டி உள்ளன.

ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் சில நிறுவனங்கள், அண்மைக் காலமாக, கடன் வாங்கியவர்களின் தகவல்களை, அவர்களின் அனுமதி இன்றி பயன்படுத்தி, மன உளைச்சல்களை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் வரத்துவங்கி உள்ளன. இதற்கிடையே, இத்தகைய மன உளைச்சல், அவமானம் ஆகியவை காரணமாக, மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதை அடுத்து, ரிசர்வ் வங்கி, இத்தகைய ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களை நெறிப்படுத்துவதற்கான பபரிந்துரைகளை வழங்க செயற்குழு ஒன்றை அமைத்தது. இந்நிலையில், கூகுள் நிறுவனம், பயனர்களின் தனியுரிமை தகவல்களை அவர்களின் அனுமதிஇன்றி பயன்படுத்தியதாக கூறி, கிட்டத்தட்ட, 60 செயலிகளை, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கிவிட்டது.

மேலும், நாட்டின் விதிமுறைகளின் கீழ் செயல்படுவதை நிரூபித்தால் மட்டுமே, செயலிகள், பிளே ஸ்டோரில் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்தது.இந்நிலையில், ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வழங்கும் சில நிறுவனங்கள், கூகுள் நடவடிக்கை குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இது குறித்து, இத்தகைய நிறுவனங்களுக்கான, ‘எப்.ஏ.சி.இ.,’ எனும் சங்கத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கூகுள் நிறுவனம் தன்னை, சூப்பர் ரெகுலேட்டராக நினைத்து செயல்படுகிறது. ரிசர்வ் வங்கி கூட கேட்காத தகவல்களை, சான்றிதழ்களை, உரிமங்களை எல்லாம் கேட்கிறது.பெரும்பாலான செயலிகள், 7 முதல், 14 நாட்களுக்குள்ளான குறுகிய கால கடன்களை வழங்கி வருகின்றன. ஆனால், கூகுள், 60 நாட்களுக்கு குறைவான கடன்களை வழங்க கூடாது என சொல்கிறது.

குறுங் கடன் வழங்கும் செயலிகளில் பெரும்பாலானவை சீனாவை சேர்ந்தவையாகும். அவற்றை ஏன் இங்கு செயல்பட, கூகுள் அனுமதிக்கிறது?அனைத்து நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான, சீரான கட்டுப்பாடுகளை கொண்டு வருமாறு கூகுள் நிறுவனத்திற்க்கு எழுதியுள்ளோம்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

மூலக்கதை