சுப்மன் கில் அரைசதம்: இந்திய அணி அபாரம் | ஜனவரி 19, 2021

தினமலர்  தினமலர்
சுப்மன் கில் அரைசதம்: இந்திய அணி அபாரம் | ஜனவரி 19, 2021

பிரிஸ்பேன்: நான்காவது டெஸ்டில் சுப்மன் கில் , புஜாரா, ரிஷாப் பன்ட் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி புதிய சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர்–கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369, இந்தியா 336 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அண 294 ரன்கள் எடுத்தது. பின், 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 4ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்தது. ரோகித் (4), சுப்மன் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில், 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (7) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய சுப்மன் கில் (91) அரைசதம் கடந்தார். கேப்டன் ரகானே (24) நிலைக்கவில்லை. நிதானமாக ஆடிய புஜாரா (56) தன்பங்கிற்கு அரைசதமடித்தார். மறுமுனையில் அசத்திய ரிஷாப் பன்ட் அரைசதம் கடந்தார். மயங்க் அகர்வால் (9) நிலைக்கவில்லை. லியான் ‘சுழலில்’ வாஷிங்டன் சுந்தர் (22) போல்டானார். ஹேசல்வுட் ‘வேகத்தில்’ ஷர்துல் தாகூர் (2) வெளியேறினார். ஹேசல்வுட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிஷாப் பன்ட் வெற்றியை உறுதி செய்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஷாப் பன்ட் (89), நவ்தீப் சைனி (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4, லியான் 2 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக ‘பார்டர்–கவாஸ்கர்’ கோப்பை வென்றது. தவிர, இம்மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக தோல்வியை தழுவியது.

மூலக்கதை