தொழிலாளர்களை... தக்க வைக்க வேண்டும் கவனம்: பற்றாக்குறை பிரச்னையை சமாளிக்க வழி

தினமலர்  தினமலர்
தொழிலாளர்களை... தக்க வைக்க வேண்டும் கவனம்: பற்றாக்குறை பிரச்னையை சமாளிக்க வழி

பொருளாதாரத்தை புரட்டிப்போட்ட கொரோனா ஊரடங்கில் இருந்து, தொழில் துறை படிப்படியாக மீண்டு வருகிறது. வங்கிக்கடன், தவணை செலுத்த அவகாசம் போன்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள், தொழிலுக்கு உந்து சக்தியாக இருந்தாலும், முழுமையாக மீளவில்லை என்பது தொழில் துறையினர் கருத்து.

கடந்தாண்டு இறுதி முதலே, மூலப்பொருட்கள் விலையேற்றம் என்பது பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. போராட்டங்களுக்கு மத்தியில் உற்பத்தி ‘ஆர்டர்’கள் பழைய நிலைக்கு திரும்பினாலும், அதிகரிக்கும் மூலப்பொருட்கள் விலை உயர்வு தொழிலை முடக்குவதாக புலம்பல்கள் தொடர்கின்றன.குறைந்தது, நான்கு மாதங்களுக்கான ஆர்டர்கள் கையில் இருந்தும், ஆட்கள் பற்றாக்குறையால் தொழில் துறை திணறிவருகிறது. ஊரடங்கின் போது கோவை, திருப்பூரில் இருந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் புறப்பட்டனர்.


இவர்களில், 30 முதல், 35 சதவீதம் பேர் மீண்டும் திரும்பாததால், தொழில் துறையினர் தற்போது திணறி வருகின்றனர். திரும்ப வராத பணியாளர்களுக்கு மாற்றாக, உள்ளூர் பணியாளர்களை தேடுவது, அவர்களுக்கு பயிற்சி அளிப்பது என, இக்கட்டான நிலையில் தொழில் முனைவோர் உள்ளனர்.வடமாநில தொழிலாளர்கள், 70 சதவீதம் வரை, மீண்டும் தொழில்களில் கால்பதித்துள்ள நிலையில் கொரோனாவுக்கு முன் அவர்களின் எதிர்பார்ப்பு வேறு; தற்போதைய எதிர்பார்ப்பு வேறு. அவர்களுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்தால் மட்டுமே, நிலையாக தக்க வைக்க முடியும் என்கின்றனர் தொழில் துறையினர்.

தொழில் முனைவோர் கூறியதாவது:தமிழகத்தில் மட்டும், 25 லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது. இக்கட்டான காலகட்டத்தில், சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் வந்தால் மட்டுமே பழைய நிலையை அடைய முடியும்.அவ்வாறு வருபவர்களை நிலையாக தக்கவைக்க, அதிக ஊதியம் வழங்குவதுடன், சலுகைகள், தங்கும் வசதி போன்றவற்றை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக, நோய் பயத்தை போக்கும் அடிப்படை வசதிகள், மருத்துவ பரிசோதனை அவர்களுக்கு தேவைப்படுகிறது.

உள்ளூர் தொழிலாளர்களோடு ஒப்பிடுகையில், அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக வழங்கினால் மட்டுமே அவர்கள் பணிபுரிகின்றனர். இல்லையேல், அடுத்தடுத்த தொழிலுக்கு தாவிக்கொண்டே இருக்கின்றனர். மீதமுள்ள, 30 சதவீதம் தொழிலாளர்களை அழைத்து வர சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். அதேசமயம், அவர்களுக்கு தேவையானவற்றை செய்துதரவில்லை எனில், அழைத்து வந்தும் பயனில்லை. தேவையான வசதிகளையும் செய்து தந்து, உரிய ஊதியம் தந்தால் தொழிலகங்களை விட்டு அவர்கள் செல்வதில்லை.இன்றைய காலகட்டத்தில் தொழிலாளர் ஆரோக்கியத்தில் அக்கறை எடுப்பதில், அனைத்து நிறுவனங்களும் பின்பற்றினாலே, தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை வராது.

அதேபோல், கிரில், நுாற்பாலை உட்பட தொழில்களில் வெளி மாநிலத்தவரின் பங்களிப்பு அதிகம்.எனவே, உள்ளூர் தொழிலாளர்களுக்கு இதுபோன்ற தொழில்களில் பயிற்சி அளித்தால் மட்டுமே பணியமர்த்த முடியும். அரசானது தொழிற்கல்வி நிறுவனங்களில் இதுகுறித்த பாடத்திட்டம் அறிமுகம் செய்வதுடன், தேவையான பயிற்சிகளும் அளித்தால், பேரிடர் சமயத்தில் வெளிமாநிலத்தவரை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை