அதிக சீட் தராவிட்டால் கூட்டணி மாறுவோம் அமித்ஷா மிரட்டல்; அதிமுக அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிக சீட் தராவிட்டால் கூட்டணி மாறுவோம் அமித்ஷா மிரட்டல்; அதிமுக அதிர்ச்சி

* மோடியுடன் எடப்பாடி 30 நிமிடம் ஆலோசனை

புதுடெல்லி: அதிக சீட் தராவிட்டால் புது கூட்டணி அமைப்போம் என அமித்ஷா மிரட்டும் வகையில் பேசிய தகவல்கள் வெளியானது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், பிரதமர் மோடியை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்கும் விதமாக தமிழக அரசியல் கட்சிகள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

எதிர்கட்சியான திமுகவின் தேர்தல் கூட்டணி என்பது உறுதியாகியுள்ள நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக  பாஜ கூட்டணி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அந்த கட்சி அறிவித்து இருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணிதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என பாஜ தரப்பில் கூறப்படுவது தொடர் சர்ச்சையாக இருந்து வருகிறது.

இதனால் அதிமுக பாஜ கூட்டணி வரும் சட்டப்பேரவை தேர்தலில் தொடருமா, அதேபோல் அதில் பாமக, தேமுதிக இடம்பெறுமா? என்பது தற்போது வரை உறுதியாகாத நிலையில் தான் இருந்து வருகிறது.    முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என பாஜ தமிழக பொறுப்பாளர் சி. டி. ரவி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தெரிவித்திருந்தாலும் இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு என்பது தொடர்ந்து இருந்து கொண்டு தான் வருகிறது.

இதையடுத்து மேற்கண்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேரம் ஒதுக்க பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த 3 தினங்களுக்கு முன் பிரதமர் அலுவலகத்தின் தரப்பில் இருந்து  அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இதையடுத்து நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். இவருடன் தலைமை செயலாளர் சண்முகம், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளும் சென்றனர்.

பின்னர், சாணக்கியாபுரி பகுதியில் இருக்கும் புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று முதல்வர் தங்கினார்.

பின்னர் மாலை 7. 30 மணிக்கு டெல்லி கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து முதல்வர் பேசினார்.

அப்போது அமைச்சர் ஜெயக்குமாரும் உடனிருந்தார். சுமார் 75 நிமிடம் நடந்த இந்த ஆலோசனையின் போது சீட் பங்கீடு, சசிகலா விடுதலை ஆகியவை உட்பட ஒட்டு மொத்த மாநிலத்தின் சூழல் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதில், பாஜவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். சிறிய கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைத்துள்ளன.

அந்த கட்சிகளுக்கு நாங்கள் சீட் ஒதுக்கிக் கொள்கிறோம் என்று அமித் ஷா கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 34 சீட்டுக்கு மேல் தர முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் இருவரின் பேச்சில் நேற்று உடன்பாடு ஏற்படவில்லை.

அதேநேரத்தில், கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இதுவரை கூட்டணியில் உள்ள பாஜக, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல் டெல்லி மேலிடம் அறிவிக்கும் என்று கூறி வருகின்றனர். இதனால் தெளிவில்லாத நிலை உருவாகியுள்ளது.

முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்கும்படி எடப்பாடி, அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் தொகுதி ஒதுக்கீடு முடியாததால், அது குறித்த எந்த உறுதிமொழியும் அமித்ஷா வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜ மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘‘தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பாஜவுக்கு 60 தொகுதிகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, கன்னியாகுமரி, கோவை, சென்னை, சேலம், திருச்சி, அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் அதிக சீட் கேட்டுள்ளோம்.

இந்த மாவட்டங்களில் எங்களுக்கு கனிச்சமான வாக்குகள் உள்ளது. ஆனால், அதிமுக மூத்த தலைவர்கள் குறைந்தது 170 முதல் 180 சீட் வரை நிற்க வேண்டும்.



அப்போதுதான் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கு முடியும் என கூறி வருகின்றனர். கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் தங்களது கோரிக்கைகளை அழுத்தமாக வைத்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகளுக்கு அவர்கள் இறங்கி வரவில்லை என்றால் டிடிவி. தினகரனுடன் சேர்ந்து புதிய கூட்டணி வைக்கவும் தயங்க மாட்டோம். இதை எடப்பாடியிடமும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஆனால் சசிகலா இல்லாத அதிமுகவை தற்போது தாங்கள் கட்டமைத்திருப்பதாகவும், கட்சி கட்டுக்கோப்பாக உள்ளதாகவும் எடப்பாடி தெரிவித்துள்ளார். மேலும், அவர் மீண்டும் மூத்த தலைவர்களுடன் பேசிவிட்டு முடிவை அறிவிப்பதாக கூறி உள்ளார் என்றனர்.



இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கடந்த வாரம் சென்னையில் இருந்து பெங்களுர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்று பாஜ முக்கிய தலைவர்களை சந்தித்து சசிகலா விடுதலை குறித்து பேசி உள்ளார். அப்போது, தமிழக அரசியல் குறித்தும் டிடிவி.

தினகரன் பாஜ தலைவர்களுடன் பேசி உள்ளார். அதில், அதிமுக, அமமுக இணைப்பு குறித்தும் பேசப்பட்டது.

இதற்கு அதிமுக தலைவர்கள் ஒத்துவரவில்லை என்றால் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க பாஜ ஒரு ரகசிய திட்டம் போட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நடந்த அமித்ஷா,, எடப்பாடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால் டிடிவி. தினகரன் மீண்டும் நேற்று ரகசியமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

அவர் மீண்டும் பாஜ தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரதமர் மோடியை, லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள வீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை 10. 30 மணிக்கு சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடம் நடந்தது.

அப்போது அமித்ஷாவுடன் நேற்று நடத்திய பேச்சு, கூட்டணி விவகாரம் குறித்து பேசியுள்ளனர். மேலும், தமிழகத்திற்கு இதுவரை ஒதுக்க வேண்டிய ரூ. 19 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும்.

மேலும் 5 திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்ததாகவும் கூறப்படுகிறது.


.

மூலக்கதை