கார் வாங்குவோர் அதிர்ச்சி!: மூலப்பொருள் விலை உயர்வால் கார்களின் விலையை ரூ.34,000 வரை உயர்த்தியது மாருதி சுசுகி..!!

தினகரன்  தினகரன்
கார் வாங்குவோர் அதிர்ச்சி!: மூலப்பொருள் விலை உயர்வால் கார்களின் விலையை ரூ.34,000 வரை உயர்த்தியது மாருதி சுசுகி..!!

டெல்லி: நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை 34 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மூலப்பொருட்களுக்கான செலவீனங்கள் அதிகரித்துள்ளதால் அதனை ஈடு செய்யும் விதமாக குறிப்பிட்ட சில கார்களின் விலையை உயர்த்தியுள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் பங்குசந்தையிடம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், எந்தெந்த மாடல் கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறித்து தெரிவிக்கவில்லை. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார மந்தநிலையால் வாகனங்களுக்கான தேவை குறைந்து விற்பனை மந்தமாகியுள்ளது. இதில் கொரோனா பாதிப்பும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்டீல் மற்றும் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வு புதிதாக கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. சமீபத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இதே உற்பத்தி செலவுகளை காரணம் காட்டி தனது பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையை 1.9 சதவீதம் வரையில் உயர்த்தியது. இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி டெல்லியை தலைமையிடமாக கொண்டு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை