ஜோ உயிருக்கு ஆபத்து? கண்காணிப்பில் பாதுகாப்பு வீரர்கள்!

தினமலர்  தினமலர்
ஜோ உயிருக்கு ஆபத்து? கண்காணிப்பில் பாதுகாப்பு வீரர்கள்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், பாதுகாப்புப் படை வீரர்களால் தாக்கப்படலாம் என, தகவல் பரவியுள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோரை, அந்த நாட்டின் உளவு அமைப்பான, எப்.பி.ஐ., கண்காணித்து வருகிறது.

அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், நாளை பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வன்முறைஅதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் சமீபத்தில், 'கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.'பதவியேற்பு விழா நடக்கும் நாளில் அல்லது அதற்கு முன், டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடலாம்' என, அமெரிக்காவின் உளவு அமைப்பான, எப்.பி.ஐ., எச்சரித்துள்ளது.அதனால், வழக்கத்தைவிட அதிக அளவு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், 'பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, டிரம்பின் ஆதரவாளர்கள் சிலரால், அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' என, தகவல் பரவியுள்ளது. அதனால், ராணுவ அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ராணுவ அமைச்சர் ரயான் மெக்காத்தி, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள, 25 ஆயிரம், 'நேஷனல் கார்ட்' எனப்படும் அதிரடிப் படையினர் குறித்த தகவல்களை ஆராய, எப்.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தகவல்கள் பரவல்


ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
ராணுவத்தில் பணியாற்றுவோர் குறித்து, அவ்வப்போது தகவல்கள் சேகரிக்கப்படும். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதா என்பது உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். அதன்படி, ராணுவ வீரர்களை, எப்.பி.ஐ., கண்காணிப்பது வழக்கமான ஒன்றுதான்.தற்போது, ராணுவ வீரர்களால், அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற தகவல்கள் பரவியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்புப் பணியில் உள்ள அனைத்து வீரர்களின் விபரங்களையும், எப்.பி.ஐ., கண்காணித்து வருகின்றது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பிசுபிசுத்த போராட்டங்கள்


'அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், 50 மாகாணங்களில் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடலாம்' என, உளவு அமைப்பான, எப்.பி.ஐ., எச்சரித்திருந்தது. இதையடுத்து, முக்கிய பகுதிகளில், போலீசாருடன், ராணுவமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. ஒரு சில இடங்களில், சிறு குழுக்களாக, டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை, போலீசார் விரட்டியடித்தனர்.

மூலக்கதை