சாலை விபத்தில் உயிரிழப்புகள் குறைவு ; மோட்டார் வாகன ஆய்வாளர் தகவல்

தினமலர்  தினமலர்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாலை பாதுகாப்பு நடவடிக்கையால், விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.இது குறித்து கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் கூறியதாவது: ஆண்டு தோறும் முதல் மாதம் கொண்டாடப்படும் சாலை பாதுகாப்பு வார விழா, நடப்பாண்டில் ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர சாலை பாதுகாப்பு நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த 890 சாலை விபத்துகளில் 1,212 காயமடைந்துள்ளனர். 258 பேர் இறந்துள்ளனர். 2019ம் ஆண்டு நடந்த 835 விபத்துகளில் 1,293 பேர் காயமடைந்துள்ளனர், 182 பேர் இறந்துள்ளனர். 2020ம் ஆண்டு நடந்த 617 விபத்துகளில் 870 பேர் காயமடைந்துள்ளனர், 194 பேர் இறந்துள்ளனர்.வாகன சோதனையின் போது அதிவேகம், அதிக பாரம் மற்றும் அதிக ஆட்களை ஏற்றி செல்லுதல், மது அருந்தியும், செல்போன் பேசிக்கொண்டும் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்கள் கண்டறியப்பட்டால் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்வதுடன், தகுதி நீக்கம் செய்யப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலையில் அதிக வெளிச்சம் இல்லாத 36 சாலை சந்திப்புகள் கண்டறியப்பட்டு, 'நகாய்'க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளின் உரிமம் 6 மாதத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை