மெரினா ஸ்மார்ட் கடைக்கு நாளை நடக்கிறது குலுக்கல்

தினமலர்  தினமலர்
மெரினா ஸ்மார்ட் கடைக்கு நாளை நடக்கிறது குலுக்கல்

சென்னை; மெரினா கடற்கரையில் கடைகள் அமைக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, நாளை மற்றும் நாளை மறுநாள், ஷெனாய் நகரில், குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கத்தோடு, 900 ஸ்மார்ட் கடைகள், குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட உள்ளன. அதில், ஏற்கனவே கடை வைத்திருப்பவர்களுக்கு, 540 கடைகளும், புதிதாக கடை அமைக்க இருப்பவர்களுக்கு, 360 இடங்களும் ஒதுக்கப்பட உள்ளன.இதற்காக, 12 ஆயிரத்து, 974 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்படி, ஷெனாய் நகர், ஏ பிளாக், 12வது தெருவில், கிரசன்ட் விளையாட்டு திடல் அருகில் உள்ள, சென்னை மாநகராட்சி அம்மா அரங்கத்தில், குலுக்கல் நடைபெற உள்ளது.நாளை காலை, 11:00 மணி முதல், 540 கடைகளுக்கும், மாலை, 3:00 மணி முதல், 360 கடைகளுக்கும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். தொடர்ந்து, நாளை மறுநாள் காலை, 11:00 மணி முதல் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.இந்த ஒதுக்கீடு, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் வழங்கப்பட உள்ள தீர்ப்புக்கு உட்பட்டது என்ற நிபந்தனையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை