கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தர்மபுரி: 10 ஆண்டாக கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம் செலுத்தியுள்ளது. இன்னும் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

அதற்கு மக்கள் தயாராக வந்திருப்பதை உணர முடிகிறது என தர்மபுரி மாவட்டம் தூள்செட்டிஏரி மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் கிராம பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்கும் வகையில் மக்கள் கிராம சபை கூட்டத்தை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

இக்கூட்டம், அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்தோடு நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட தூள்செட்டி ஏரி பகுதியில் இன்று காலை மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.



இதில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு நேற்றிரவு மு. க. ஸ்டாலின் வந்தார். அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கந்திகுப்பம் கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை மேற்கு மாவட்ட வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டைக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் சென்றார். அங்கு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன், ஓசூர் எம்எல்ஏ சத்யா ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அங்கு திறந்தவேனில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பேசினார்.

அப்போது, இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ளது.

அதுவரை காத்திருங்கள் என்றார்.

மேலும் நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா என கேள்வி எழுப்பினார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட மு. க. ஸ்டாலின் சுமார் 10. 30 மணியளவில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட தூள்செட்டி ஏரிப்பகுதிக்கு வந்தார்.

அங்கு மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, அங்கு திரண்டிருந்த கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஏராளமானோர் திரண்டு இருக்கிறீர்கள்.

உங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் பிரச்னை, சாலை பிரச்னை, பட்டா பிரச்னை உள்ளிட்டவை இருக்கிறது. அதையெல்லாம் உங்களது பிரதிநிதிகளாக 10 பேர் பேசவுள்ளனர்.

இந்த கூட்டத்தை பார்க்கும் போது, உங்களுக்கே ஒரு வித நம்பிக்கை வந்திருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் அக்கிரம ஆட்சி, அநியாய ஆட்சி நடக்கிறது. இதனால் எந்த பலனும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

கலைஞர் கருணாநிதி ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. உங்களுக்கே தெரியும்.

எல்லா திட்டங்களையும் நீங்களே அனுபவித்துள்ளீர்கள். எதையுமே செய்யாத இந்த அதிமுக ஆட்சி, பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நடக்கிறது.

10 ஆண்டுகளாக கொள்ளையடிக்க, ஊழல் செய்யும் ஆட்சியாக இருக்கிறது. இன்னும் 4 மாதம் தான் உள்ளது.

எதற்கு, ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு. அதை செய்ய நாங்க ரெடி.

நீங்க ரெடியா. உங்களது எண்ணங்கள் புரிகிறது.

அதனால் தான், குடும்பம் குடும்பமாக வந்துள்ளீர்கள். இன்னும் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பேசினார்.

.

மூலக்கதை