முதல்வர் எடப்பாடி இன்று காலை டெல்லி புறப்பட்டார்; அமித்ஷாவுடன் உடன்பாடு ஏற்படுமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வர் எடப்பாடி இன்று காலை டெல்லி புறப்பட்டார்; அமித்ஷாவுடன் உடன்பாடு ஏற்படுமா?

* இன்றிரவு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
* நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்

சென்னை: தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். மாலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசுகிறார்.

சென்னையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று மாலை உடன்பாடு ஏற்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. நாளை பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசுகிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் பயணமாக இன்று காலை 11. 55 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம், இரண்டு செயலாளர்கள் சென்றனர்.



முன்னதாக காலை 8 மணி விமானம் மூலம் கே. பி. முனுசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதியம் 2. 50 மணிக்கு தமிழ்நாடு இல்லம் சென்றார்.

அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர் இன்றிரவு 7. 30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய தலைவர் நட்டாவும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, அதிமுக- பாஜ கூட்டணியை உறுதிபடுத்துவது குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை செய்கிறார். சசிகலா விடுதலையாவதில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர்.

பின்னர் ஓட்டலில் நடந்த சந்திப்பின் போது 60 தொகுதிகள் வேண்டும் என்று அமித்ஷா கண்டிப்புடன் கேட்டதாகவும் அதற்கு 34 தொகுதிகள் மட்டுமே தர சம்மதித்தாகவும் கூறப்படுகிறது. ஆனால் அப்போது நடிகர் ரஜினியை சந்திக்கவே அமீத்ஷா சென்னைக்கு வந்ததாகவும் அது முடியாமல் போனதால் கடுமையான அதிருப்தியுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது தன்னை சந்தித்த ஒரு பிரமுகரிடம், தான் ரஜினியை சந்திக்கவே வந்தேன். அதிமுகவுடன் தொகுதி பங்கீடு நடத்த நான் சென்னை வரவேண்டுமா?

அவர்களை டெல்லிக்கு வரவழைத்து பேசியிருப்பேன் என்ற கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். கடந்த முறை சென்னை வந்தபோது 34 தொகுதிகள் தருவதாகவும், பாஜக வேட்பாளர்கள் பட்டியலை தங்களிடம் ெகாடுக்க வேண்டும்.

மாநில உளவுத்துறை மற்றும் தன்னிடம் உள்ள ஒரு சிறப்பு டீம் மூலம் அவர்களை ஆய்வு செய்து பின்னர் பட்டியல் வெளியிடலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த உடன்பாட்டை அமீத்ஷா ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.



இதனால் இந்த முறை டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் 60 தொகுதியை கேட்டு பாஜக உறுதியாக இருப்பதாகவும் புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட சிறு கட்சிகள் எங்களுடன்தான் கூட்டணியில் உள்ளனர். அவர்களுக்கு நாங்கள் சீட் கொடுக்கிறோம் என்று உறுதியாக கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இன்று அமித்ஷாவுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் 60 தொகுதிகளை விட்டுக் கொடுத்து விட்டு வருவாரா அல்லது அமித்ஷாவை சமாதானப்படுத்தி 34 சீட்டுகளை மட்டும் கொடுப்பாரா என்று இன்று இரவு நடக்கும் பேச்சுவார்த்தையின்போது உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலின் போது தமிழக பொறுப்பாளராக இருந்த பியூஸ் கோயல் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசினார். அப்போது 5 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

பேச்சுவார்த்தையில் பாதியிலேயே எழுந்து தனது அறைக்குச் சென்று விட்டார். ஆனால் இந்த முறை நேரடியாகவே அமித்ஷாவுடன் பேச இருப்பதால் அவரிடம் கறாராக பேச முடியாது.

மேலும், பாஜகவுக்கு தொகுதிகளை ஒதுக்கிய பின்னர்தான் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அதிமுக திட்டமிட்டுள்ளது. இதனால் இன்று எப்படியாவது தொகுதி பங்கீட்டை முடிக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாஜ கேட்கும் தொகுதியை அதிமுக கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை அதிமுக தலைமைக்கு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமி தமிழ்நாடு இல்லம் திரும்புகிறார். நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார்.

அப்போது, தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள், நதிநீர் இணைப்பு திட்டம், ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்குவது உள்ளிட்டவற்றை கோரிக்கையாக வைக்கவும் முதல்வர் பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் வண்ணராப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டம், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், கல்லணை சீரமைப்பு திட்டம்,

பவானி கால்வாய் சீரமைப்பு திட்டம், நெய்வேலி என்எல்சி சூர்ய மின்சக்தி திட்டம் ராமநாதபுரம், தூத்துக்குடி காஸ் குழாய் திட்டம் ஆகிய 5 திட்டங்களை தொடங்கி வைக்கும்படி பிரதமரை அவர் கேட்டுக் கொள்வார் என கூறப்படுகிறது.

பின்னர், டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாளை இரவு 8. 50 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

முதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை