தமிழகம் முழுவதும் விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் 25ம்தேதி வரை பெறலாம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம் முழுவதும் விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் 25ம்தேதி வரை பெறலாம்

சென்னை: விடுபட்டவர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் வழங்கப்பட்டு வருகிறது. வரும் 25ம்தேதி வரை விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 20ம்தேதி முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.



இத்திட்டத்துக்காக ரூ. 5 ஆயிரத்து 604 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ரூ. 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் கடந்த 4ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை மற்றும் மாலையில் தலா 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதை வாங்க முடியாதவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இதற்கான தேதியை வரும் 25ம்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.



இதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள் இன்று முதல் 25ம் தேதி வரை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி விடுபட்டவர்களுக்கு இன்று காலை முதல் விநியோகம் தொடங்கியது.

வாங்காதவர்கள் தங்களுக்கான நியாய விலை கடைகளை அணுகி பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்று வருகின்றனர்.

கடந்த 4 ம் தேதி முதல் 13ம் தேதி வரை 2. 02 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் விடுபட்டவர்களுக்கு இன்று முதல் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை