வருமான வரி திட்டமிடலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

தினமலர்  தினமலர்
வருமான வரி திட்டமிடலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

வரி சேமிப்பு திட்டமிடலை மேற்கொள்ளும் போது, அனைத்து பிரிவுகளின் கீழ் பொருந்தக்கூடிய சலுகைகளை அறிந்திருப்பது அவசியம்.


பொதுவாக வருமான வரி திட்டமிடலை, நிதியாண்டின் துவக்கத்திலேயே மேற்கொள்வது சிறந்தது. முன்னதாக திட்டமிடும் போது, வரி சேமிப்பு நோக்கிலான முதலீடுகளை நன்றாக ஆராய்ந்து தேர்வு செய்ய முடியும் என்பதோடு, முதலீட்டிற்கு தேவையான தொகையையும் திட்டமிடுவது சாத்தியம்.கடைசி நேரத்தில் திட்டமிடும் போது, அவசரத்தில் பொருத்தமில்லாத வரி சேமிப்பு வாய்ப்புகளை தேர்வு செய்ய நேரலாம். மேலும், வரி சேமிப்பிற்கான முதலீடு, நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதும் முக்கியம். நீண்ட கால நோக்கில் செல்வ வளத்தை உருவாக்கிக் கொள்ள, இது மிகவும் அவசியம்.


வரி சலுகை பிரிவு


வருமான வரி திட்டமிடலில், இன்னொரு முக்கிய அம்சமும் இருக்கிறது. வரி சலுகைக்கு பொருந்தக்கூடிய அனைத்து விதமான வாய்ப்புகளையும் அறிந்திருப்பதாகும். வரி சலுகைக்கான சேமிப்பு என்று வரும் போது, வருமான வரி சட்டம் – 80சி பிரிவு பரவலாக அறியப்பட்டதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் இருக்கிறது.


இந்த பிரிவின் கீழ், பொருத்தமான முதலீடுகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வரி சலுகை கோரலாம். வீட்டுக்கடன் வட்டி, பி.பி.எப்., முதலீடு உள்ளிட்ட பல வாய்ப்புகள் இந்த பிரிவின் கீழ் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. என்.பி.எஸ்., எனும் தேசிய பென்ஷன் திட்ட முதலீட்டிற்கான தொகையும் இந்த பிரிவின் கீழ் வருகிறது.எனினும், 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இத்திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டிற்கு, இந்த பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.


இந்த பிரிவின் கீழ் பலன் பெற, பி.பி.எப்., போன்ற வழக்கமான முதலீடுகள் ஏற்றதா அல்லது சம பங்கு சார்ந்த முதலீடுகள் ஏற்றதா எனும் கேள்வியை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும் என்பதோடு, வரி சலுகைக்கு பொருத்தமான மற்ற பிரிவுகளையும் மனதில் கொள்ள வேண்டும்.


மருத்துவ காப்பீடு


கொரோனா பாதித்துள்ள தற்போதைய சூழலில், மருத்துவ காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு பல மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவ காப்பீடு பாலிசிக்காக செலுத்தப்படும் பிரிமியம் தொகை, 80டி பிரிவின் கீழ் வரி சலுகைக்கு உரியது என்பதை அறிய வேண்டும்.


பாலிசி பெறுபவரின் வயது மற்றும் குடும்பத்தின் அளவிற்கு ஏற்ப, இந்த பிரிவின் கீழ் பிடித்தம் கோரலாம்.காப்பீடு பிரிமியம் தொகைக்காக, 25 ஆயிரம் ரூபாய் வரை பிடித்தம் கோரலாம். மருத்துவ பரிசோதனைக்கான தொகையும் இதில் அடங்கும். மேலும், பெற்றோருக்கான காப்பீடு பிரிமியத்திற்கும் சலுகை பெறலாம்.


பெற்றோருக்கான மருத்துவ செலவுக்கு என, 50 ஆயிரம் ரூபாய் வரை சலுகையும் கோரலாம்.இது தவிர, 80டிடி பிரிவின் கீழ், மாற்றுத் திறனாளி குடும்பத்தினருக்கான மருத்துவ செலவையும் பிடித்தமாக கோரலாம். மேலும், 80இ பிரிவின் கீழ், கல்விக் கடன் மூலம் வரி சலுகை பெற முடியும். யாருடைய பெயரில் கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவர் வரி சலுகை பெறலாம்.எனினும் அனைத்து கல்விக் கடன்களுக்கும் இது பொருந்தாது.


குறிப்பிட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கே பொருந்தும். கடன் மீதான வட்டிக்கு மட்டுமே சலுகை பொருந்தும் என்பதையும் கவனிக்க வேண்டும். வங்கி சேமிப்பு கணக்கு வட்டிக்கும், 10 ஆயிரம் ரூபாய் வரை வரி சலுகை பொருந்தும்.

மூலக்கதை