தடுப்பூசி செலவு: அரசால் சமாளிக்க முடியுமா?

தினமலர்  தினமலர்
தடுப்பூசி செலவு: அரசால் சமாளிக்க முடியுமா?

கடந்த சனிக்கிழமையன்று, இந்தியாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு போடப்படும் தடுப்பூசிக்கான மொத்த செலவையும், மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது. அப்படியானால், மொத்த இந்தியர்களுக்கும் போடப்படும் தடுப்பூசி செலவு எவ்வளவு?

தடுப்பூசி மருந்துக்கான அனுமதி, உற்பத்தி ஆகியவை பற்றி பேச்சு எழுந்தபோதே, அதற்கான செலவு மதிப்பீடும் வெளியாகத் தொடங்கியது. தற்போது, முதல் கட்டமாக, பிரதமரது,'பி.எம். கேர்ஸ்' நிதியில் இருந்து, 220 கோடி ரூபாய்க்கு, முதல் தடுப்பூசித் தொகுப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு, 60 முதல், 65 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

அதாவது பிரிட்டன் மாதிரி அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுமேயானால். இவ்வளவு பெரிய தொகையை எப்படி மத்திய அரசு திரட்டப் போகிறது?வரும் பட்ஜெட்டில், இதற்கென்றே, ‘தடுப்பூசி வரி’ கொண்டுவரப்படலாம் என்று நிதியமைச்சக செய்திகளை ஒட்டி பல்வேறு ஆங்கில வணிக இதழ்கள் எழுதியுள்ளன.ஒரு சதவீதமா, இரண்டு சதவீதமா? உயர் வருவாய் பிரிவினரின் வருமான வரியோடு கூடுதல் வரியாக இது விதிக்கப்படுமா? ஆடம்பரப் பொருட்கள் மீது விதிக்கப்படும், 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியோடு சேர்த்து வசூலிக்கப்படும் கூடுதல் தீர்வையோடு இணைக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதை ஜி.எஸ்.டி. கவுன்சில் தானே முடிவு செய்ய முடியும்? மத்திய அரசு தன்னிச்சையாகச் செய்ய முடியுமா என்றும் விவாதிக்கின்றனர்.பட்ஜெட்டில் இந்த வரி வந்தால் தான், முழு விவரம் தெரியவரும். முதலில் இப்படி ஒரு வரியை மத்திய அரசு கொண்டுவர விரும்புகிறதா என்பதைப் பார்க்கவேண்டும். இத்தகைய வரி, அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகலாம் என்பதால், மத்திய அரசு ஜாக்கிரதையாகவே இவ் விஷயத்தைக் கையாளும் என்று நம்பலாம்.

அப்படியே கொண்டுவரப்படுமானால், வேறுசில அம்சங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, மத்திய அரசு, 12 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கும் முடிவில் இருக்கிறது. பணவீக்கமும் அதிகமாகவே உள்ளது. மருத்துவச் செலவு இன்றியமையாதது என்றாலும், அதன் மொத்தச் சுமையையும் மத்திய, மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியைப் பல பொருளாதார நிபுணர்கள் எழுப்புகின்றனர்.

இன்றைக்கு பல தொழிற்சாலைகளும், பெருநிறுவனங்களும், எம்.எஸ்.எம்.இ.களும் தங்கள் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஆயத்தமாக உள்ளன. மூன்று ஷிப்டுகளுடன் முழு உற்பத்தியைத் துணிச்சலுடன் தொடங்குவதற்கு, தடுப்பூசி தூண்டுகோலாக அமையும் என்பது அவர்களது கருத்து.விவரம் தெரிந்த தனிநபர்களும், மத்தியமர்களும் கூட, சொந்த செலவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தயாராக உள்ளனர்.

அரசாங்கம் செய்யவேண்டியவை இவைதான்:

பல்வேறு கட்ட சோதனைகளில் வெற்றிபெற்ற, இன்னும் இரண்டு தடுப்பூசி மருந்துகளுக்கு விரைந்து அனுமதி அளித்து, உற்பத்தியைத் தொடங்கச் சொல்லவேண்டும். அரசாங்கத்துக்கு வழங்கப்படும் அதே, 210 ரூபாய் விலையில், தடுப்பூசி மருந்து, சந்தையில் கிடைக்கும்படியும் ஏற்பாடு செய்யவேண்டும்.கொரோனா ஆரம்பத்தில் முழு உடம்பு கவசங்களும், முகக் கவசங்களும் அரிய பொருட்களாக இருந்தன; விலை கூடுதலாகவும் இருந்தன. தற்போது பெட்டிக்கடைகளில் எல்லாம் முகக் கவசங்கள் சீரழிகின்றன.

அதுபோல் இல்லை என்றாலும், குறைந்தபட்சம் மற்ற தடுப்பூசிகளைப் போன்று, கொரோனா தடுப்பூசியும், மருந்துவனைகளிலேனும் எளிதாக கிடைப்பதற்கான ஏற்பாட்டை துரிதமாகச் செய்யவேண்டும்.ஏழை எளியோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கலாம். அந்தச் செலவை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் போதும்.

இதற்கும் கூட, ஏராளமான பெருநிறுவனங்கள் தங்கள், ‘சி.எஸ்.ஆர்.,’நிதியில் இருந்து பெருந்தொகையை தானமாக வழங்க முன்வரும்.ஒரு விஷயம் முக்கியம். இருப்பவர்கள், இல்லாதபட்டோருக்கு வாய்ப்பு கொடுத்து ஒதுங்குவதே, தார்மிகக் கடமை.

எப்படி, சமையல் எரிவாயு மானியத்தை கோடிக்கணக்கானோர் விட்டுக் கொடுத்ததன்மூலம், இன்று நாடெங்கும் 7.2 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் கிடைத்து உள்ளதோ, அதேபோல், கொரோனா தடுப்பூசி மருந்தும் இல்லாதோருக்குக் கிடைக்க வழிவிட வேண்டும்.சகாயமான விலையும், தட்டுப்பாடு இல்லாத சூழலும் தான், கொரோனா தடுப்பூசி பரவலாகப் போய்ச் சேருவதற்கான வழிமுறை. அதை மட்டும் அரசாங்கம் உறுதிப்படுத்தி னால் போதும்.
ஆர்.வெங்கடேஷ்

[email protected]

9841053881

மூலக்கதை