புதிய பாதை! திருப்பூர் பயணிக்க துவங்கியிருக்கிறது

தினமலர்  தினமலர்
புதிய பாதை! திருப்பூர் பயணிக்க துவங்கியிருக்கிறது

திருப்பூர்;பொங்கல் திருவிழாவை தொடர்ந்து, சாதிப்பதற்கான புதிய பாதையை நோக்கி, திருப்பூர் பயணிக்க துவங்கியிருக்கிறது.தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியிருப்பதால், கொரோனா அச்சம், முழுமையாக நீங்கும் வாய்ப்பு, தற்போது, ஏற்பட்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, வேளாண்மை மற்றும் தொழில்துறை, இரு கண்களாக விளங்குகின்றன.
ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் முதல், பின்னலாடை, விசைத்தறி உள்ளிட்ட தொழில்துறை, முடங்கும் நிலை ஏற்பட்டது. கடந்த ஜூன் முதல், படிப்படியாக திறக்கப்பட்டதையடுத்து, பழைய நிலைக்கு மீள்வதற்கு, தொழிலகங்கள், முயற்சித்து வருகின்றன.பொங்கல் திருவிழா தற்போது, முடிவுக்கு வந்துள்ளது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதை நிரூபிக்கும் வகையில், வேளாண் துறை நடை போடுகிறது. இந்தாண்டு, எதிர்பார்ப்பைக் காட்டிலும், அதிக மழை பெய்துள்ளது. தொடர் மழை, பயிர் அழுகல் போன்ற இழப்புகளை ஏற்படுத்தினாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வு,தொடர் பயிர் சாகுபடி போன்றவற்றுக்கு உகந்ததாக, மழை பெய்திருக்கிறது.தொழில்துறை சார்ந்த, விவசாய நிலம் வைத்திருப்போர் கூட, மீண்டும் விவசாயத்தின்மேல் அக்கறை காட்டும் நிலை உள்ளது.'விவசாயிகள், விவசாயம் மட்டுமின்றி, மதிப்புக்கூட்டு பொருட்களாக விளைபொருட்களை மாற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிவருகின்றனர்.
கறிக்கோழி, நாட்டுக்கோழி, கால்நடை வளர்ப்பு என்பது மட்டுமின்றி, விவசாயம் சார் தொழில்களிலும் ஈடுபடுவதற்கு, விவசாயிகள் முன்னுரிமை அளித்து வருகின்றனர். 'ஸ்டார்ட் அப்' உள்ளிட்ட முயற்சிகளுக்கு அரசும் உதவுகிறது,' என்கின்றனர், விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.பின்னலாடை உள்ளிட்ட தொழில்துறை, மீண்டு வந்தாலும், முழுமையான மீட்சி என்பது, ஆர்டர்கள் அதிகம் கிடைப்பதைப் பொறுத்ததாக தான் இருக்கிறது.ஐரோப்பிய நாடுகளில், கொரோனா இரண்டாவது அலை பரவியது, பின்னலாடை தொழில்துறைக்கு சற்று பின்னடைவை தந்திருக்கிறது.
இருப்பினும், தற்போது தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், கொரோனா அச்சம், உலகம் முழுதும் நீங்கும் நிலை உருவாகியிருக்கிறது. இதனால், தொழில்துறை, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் வகையில், புதிய யுத்திகளைக் கையாள்வதற்கும், ஆர்டர்களை அள்ளுவதற்கும் தயாராகியிருக்கிறது.
'தடுப்பூசி செலுத்தப்படுவதால், தொழிலாளர் பற்றாக்குறை, கொரோனா அச்சம் முழுமையாக நீங்கும்.இது திருப்பூர் தொழில்துறையினருக்கு உதவிகரமாக இருக்கும். தொழில்துறையினருக்கான சிறந்த துவக்கமாக, பொங்கல் திருவிழா அமைந்திருக்கிறது.இந்தாண்டு, கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு மூலம், தொழில்துறை சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன,' என்று தொழில்துறையினர் கூறுகின்றனர்.

மூலக்கதை