துவங்கியது! எட்டு மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் ....நாளொன்றுக்கு 100 பேருக்கு தடுப்பூசிக்கு ஏற்பாடு

தினமலர்  தினமலர்
துவங்கியது! எட்டு மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் ....நாளொன்றுக்கு 100 பேருக்கு தடுப்பூசிக்கு ஏற்பாடு

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது.

நாடு முழுவதும் நேற்று கொரோனா தடுப்பூசி முகாமை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார். புதுச்சேரி மாநிலத்தில், அரசு மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மகளிர் குழந்தைகள் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லுாரி, ஜிப்மர், கரிக்கலாம்பாக்கம் சமுதாய நல மையம், காரைக்கால், மாகி, ஏனாம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 8 மையங்களில் தடுப்பூசி போடும் முகாம் துவங்கியது.எல்லைபிள்ளைச்சாவடி ராஜிவ் காந்தி அரசு மகளிர் குழந்தைகள் மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.

ஜெயபால் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன் குமார் பங்கேற்றனர்.முதல் தடுப்பூசி கள விளம்பர உதவியாளர் முனுசாமி, அடுத்ததாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி முரளி ஆகியோருக்கு போடப்பட்டது. அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்தனர். அலர்ஜி, உடல் உபாதை பிரச்னை வந்ததா என ஆய்வு செய்தனர். ஓய்வு எடுக்க தனி அறை ஒதுக்கியிருந்தனர்.முதல் நாளில் எவ்வளவு


மாநிலத்தில் முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட 17 ஆயிரத்து 500 கோவிஷீல்டு டோஸ் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தில் நேற்று 800 முன் கள அலுவலர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் 274 பேருக்கு மட்டுமே போடப்பட்டது.புதுச்சேரி பிராந்தியத்தில் 150; ஜிப்மரில் 101; புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை 7 ; ராஜிவ் காந்தி அரசு மகளிர் மருத்துவ கல்லுாரி 10; அரசு மருத்துவ கல்லுாரி 17 ; கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில் 15 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

காரைக்காலில் 15; மாகே 79 ; ஏனாம் 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.புதுச்சேரியில் வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது. தினசரி ஒரு இடத்தில் 100 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை