இலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்க சுதந்திரமான தனி அமைப்பு: ஐநா.வுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்

தினகரன்  தினகரன்
இலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்க சுதந்திரமான தனி அமைப்பு: ஐநா.வுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்

கொழும்பு: இலங்கை போர் குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை அமைப்பை, குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயத்தோடு நியமிக்க புதிய தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிடம் இலங்கை தமிழ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், போர்க்குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும் என ஐநா.வில் கடந்த 2015, 2017 மற்றும் 2019ல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு இலங்கையின் அன்றயை அதிபர் மைத்ரிபால சிரிசேனா தலைமையிலான அரசு ஒப்புக் கொண்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அப்போது ராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆனார். அதன்பின், ஐநா தீர்மான ஆதரவில் இருந்து இலங்கை வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 46வது கூட்டத் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இதில் போர் குற்ற விசாரணைக்காக புதிய தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென இலங்கை தமிழ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இதுதொடர்பாக இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும் ஐநா மனித உரிமைகள் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தூதரகங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளன. அதில், ‘சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை அமைப்பை நியமிக்க ஐநா மனித உரிமை கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த அமைப்பு சிரியாவை போல் ஓராண்டில் விசாரணையை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும், ஐநா தீர்மானத்தில் இருந்து வெளியேறியதற்காக இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மூலக்கதை