உலகப்புகழ் ஜல்லிக்கட்டை முதல்வர் துவக்கி வைத்தார் அலங்காநல்லூரில் காளைகள் ‘அதகளம்’: அடங்க மறுத்த மாடுகள்; அடக்கி சிலிர்த்த வீரர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலகப்புகழ் ஜல்லிக்கட்டை முதல்வர் துவக்கி வைத்தார் அலங்காநல்லூரில் காளைகள் ‘அதகளம்’: அடங்க மறுத்த மாடுகள்; அடக்கி சிலிர்த்த வீரர்கள்

அலங்காநல்லூர்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தனர்.

பொங்கல் திருவிழாவின் 3ம் நாளான இன்று, உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது. முன்னதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், பாஜ மாநில தலைவர் எல். முருகன், மாநில பாஜ விவசாய அணி துணை தலைவர் முத்துராமன், கலெக்டர் அன்பழகன், எஸ். பி. சுஜித்குமார் ஆகியோர் காலை 8 மணியளவில் வேஷ்டி, துண்டு, பரிசுப்பொருட்களை அலங்காநல்லூரில் உள்ள முனியாண்டி கோயில், அய்யனார் கோயில் முத்தாலம்மன் கோயில், காளியம்மன் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் களத்திற்குள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

கலெக்டர் அன்பழகன் தலைமையில் மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பு மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து காலை 8 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தனர்.

வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு மரியாதை செய்யப்பட்டன. மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் உடன் வந்தவர்களின் கொரோனா பரிசோதனை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

பின்னர் அவர்கள் ஜல்லிக்கட்டு களத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாய்ந்தன. மாடுபிடி வீரர்களும் எதிர்பாய்ச்சல் காட்டினர்.

850 காளைகள் அடுத்தடுத்து வரிசையாக வாடிவாசலில் இருந்து, பாய்ந்து வந்து, ஜல்லிக்கட்டு திடலில் கெத்து காட்டின.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளுக்கும் டூவீலர், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், சைக்கிள், தங்ககாசு, வெள்ளிக்காசு, சில்வர் பாத்திரம், பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. அதிக காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசாக கார்கள் மற்றும் டூவீலர்கள் இன்று மாலை வழங்கப்பட உள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டி 10க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரை மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. காவலன் செயலி மற்றும் யூ டியூப் மூலம் மாவட்ட காவல் துறையினர் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.



ஏ. சி கேலரி
முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட விஐபிகள் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட பிரத்யேகமான மேடை பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஜல்லிக்கட்டை காண அனுமதி வழங்கப்படவில்லை.   ஜல்லிக்கட்டை முன்னிட்டு  முதன் முறையாக அலங்காநல்லூரில் இன்று அன்னதானமும் வழங்கப்பட்டது.

.

மூலக்கதை