பங்குகளை திரும்ப பெறுகிறது ‘கெய்ல்’

தினமலர்  தினமலர்
பங்குகளை திரும்ப பெறுகிறது ‘கெய்ல்’

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய எரிவாயு வினியோக நிறுவனமான, ‘கெய்ல் இந்தியா’ நிறுவனம், 1,046 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.தன் கைவசம் உள்ள உபரி பணத்தை, பங்குதாரர்களுக்கு திரும்ப வழங்கும் வகையில், இந்த பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை, கெய்ல் அறிவித்துள்ளது.

இந்நிறுவனம், பங்குச் சந்தைகளுக்கு வழங்கி இருக்கும் அறிவிப்பில், 6.97 கோடி பங்குகளை, ஒரு பங்கின் விலை, 150 ரூபாய் என்ற அடிப்படையில், திரும்ப வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.இது, அதன் பங்குகள் எண்ணிக்கையில் ,1.55 சதவீதம் ஆகும். மேலும், கெய்ல் நிறுவனத்தின் நிர்வாகக் குழு, 25 சதவீத இடைக்கால ஈவுத்தொகையை வழங்கவும் அனுமதி வழங்கி இருக்கிறது.

இதை அடுத்து, ஒரு பங்குக்கு, 2.50 என்ற வீதத்தில், ஈவுத் தொகை வழங்கப்படும்.மத்திய அரசின் வசம், கெய்ல் நிறுவனத்தின், 51.76 சதவீத பங்குகள் உள்ளன. பங்குகளை திரும்ப வாங்குவதற்கும், இடைக்கால ஈவுத் தொகை வழங்குவதற்கும், பதிவு தேதி, ஜனவரி, 28 என கெய்ல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை