ஆட்டோமேடட் கார்கள் செல்ல உதவும் ஸ்மார்ட் சாலைகள்; ஹுவவே நிறுவனம் பரிசோதனை

தினமலர்  தினமலர்
ஆட்டோமேடட் கார்கள் செல்ல உதவும் ஸ்மார்ட் சாலைகள்; ஹுவவே நிறுவனம் பரிசோதனை

பெய்ஜிங்: சீனாவின் ஹுவவே நிறுவனம் கடந்த ஆண்டு அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு மற்றும் அரசு ரகசியங்களை சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவவே திருடுவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு குற்றம் சாட்டி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த சீன தொழில்நுட்ப நிறுவனம் சீனாவின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள குக்ஷி நகரில் நான்கு கிலோமீட்டர் சாலையில் தொழிநுட்ப பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஆட்டோமேட்டட் கார் தொழில்நுட்பம் தற்போது கார் நிறுவனங்களால் சோதனை செய்யப்பட்டுவரும் நிலையில் டிரைவர் இல்லாத இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வழிநடத்தும் ஸ்மார்ட் சாலைகளை உருவாக்க இந்த நிறுவனம் தற்போது ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்த நான்கு கிலோ மீட்டர் சாலை சோதனை செய்யப்படுகின்றது.

இந்த சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் ரேடார் மற்றும் கேமராக்கள் ஆளில்லாத ஆட்டோமேட்டட் கார்களுடன் தொடர்பு கொள்ளும். சாலைக்கும் ஆட்டோமேட்டட் கார்களுக்கும் உள்ள தொடர்பு மூலமாக எதிரே வரும் வாகனங்கள், டிராபிக் உள்ளிட்டவற்றை கார்கள் தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப வாகனத்தின் வேகம் அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும். இந்த ஸ்மார்ட் சாலை பரிசோதனை வெற்றிபெற்றால் உலகம் முழுக்க ஆட்டோமேடட் கார்களால் எளிதில் சாலைகளில் இயங்க முடியும்.இன்னும் 50 ஆண்டுகளில் உலகில் ஓட்டுநர்கள் இல்லாத ஆட்டோமேட்டட் வாகனங்கள் ஸ்மார்ட் சாலைகளில் செல்ல வாய்ப்புள்ளது. இதற்கு வித்திடும் வகையில் தற்போது சீனாவின் ஹுவவே தொழில்நுட்ப நிறுவனம் இந்த பரிசோதனையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை