சபரிமலையில் இன்று மகரஜோதி, மகர சங்கரமபூஜை

தினமலர்  தினமலர்
சபரிமலையில் இன்று மகரஜோதி, மகர சங்கரமபூஜை

சபரிமலை : சபரிமலையில் இன்று மகரவிளக்கு விழா நடைபெறுகிறது. முக்கிய பூஜையான மகரசங்கரமபூஜை காலை 8:14 மணிக்கு நடக்கிறது.


கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் மகரவிளக்கு சீசனின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு விழா இன்று நடைபெறுகிறது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தடையும். அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும். மாலை 6:25 மணிக்கு 18- படி வழியாக சோபானத்திற்கு வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து சிலையில் ஆபரணங்கள் அணிவிப்பர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெறும்.

தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பல மேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தரும். தொடர்ந்து மகரஜோதி மூன்று முறை காட்சி தரும்.மகரவிளக்கு நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகரசங்கரமபூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படுகிறது. இது இன்று காலை 8:14 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக சிலையில் அபிஷேகம் செய்யப்படும்.

கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஜோதி தெரியும் அட்டத்தோடு, பஞ்சிப்பாறை, இலவுங்கல் போன்ற இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலை ரோடுகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 54 நாட்களில் 1,32,673 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். 16.30 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு வருமானத்தை ஒப்பிடும் போது மண்டல காலத்தில் ஆறு சதவீதமும், மகரவிளக்கு காலத்தில் 10 சதவீதமும் கிடைத்துள்ளது.

தேவசம்போர்டுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். நிலைமையை சமாளிக்க தேவைப்பட்டால் வங்கியில் கடன் பெறப்படும். அடுத்து மாசி மாத பூஜைக்கு எவ்வளவு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பது பற்றி அரசுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.மகரவிளக்கு சீசனில் புதிதாக மூன்று பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களும் மண்டல காலத்தில் சபரிமலை வந்தவர்கள். ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை கட்டாயமாக்கப்பட்ட பின்னர் கொரோனா தாக்கம் சபரிமலையில் குறைந்துள்ளது. பாடகர் வீரமணி ராஜூவுக்கு இன்று ஹரிவராசனம் விருது வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை