'பயிர் காப்பீடு திட்டத்தால் பல கோடி விவசாயிகளுக்கு பலன்'

தினமலர்  தினமலர்
பயிர் காப்பீடு திட்டத்தால் பல கோடி விவசாயிகளுக்கு பலன்

புதுடில்லி:''பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தால், பல கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இயற்கை மாற்றம் உட்பட பல்வேறு பிரச்னைகளால், விவசாயிகள் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். இவர்களை பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு, பி.எம்.எப்.பி.ஒய்., எனப்படும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 'டுவிட்டரில்' பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:பி.எம். எப்.பி.ஒய்., திட்டத்தால், பல கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இத்திட்டம், விவசாயிகளுக்கு எப்படி உதவியுள்ளது என்பதை, 'நமோ ஆப்' வழியாக அறிந்து கொள்ளலாம்.

இந்த திட்டம், விவசாயிகளுக்கு பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள பெரிதும் உதவியுள்ளது. இத்திட்டத்தால் பலன் அடைந்த விவசாயிகளுக்கு, என் பாராட்டுகள்.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மூலக்கதை