ஹரியானாவில் கூட்டணி தொடருமா? மோடியுடன் துஷ்யந்த் சந்திப்பு!

தினமலர்  தினமலர்
ஹரியானாவில் கூட்டணி தொடருமா? மோடியுடன் துஷ்யந்த் சந்திப்பு!

புதுடில்லி :விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஹரியானாவில் உள்ள பா.ஜ., கூட்டணி அரசில் இருந்து, ஜனநாயக் ஜனதா கட்சி விலகலாம் என்று பரவலாக பேசப்படும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவரும், துணை முதல்வருமான, துஷ்யந்த் சவுதாலா, பிரதமர், நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார்.

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்து உள்ளது. பெரும்பான்மைக்கு, 46 இடங்கள் தேவை என்ற நிலையில், 2019ல் நடந்த தேர்தலில் பா.ஜ., 40 இடங்களில் வென்றது. கூட்டணி கட்சியான, ஜே.ஜே.பி., எனப்படும் ஜனநாயக் ஜனதா கட்சி, 10 இடங்களில் வென்றது.வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், உ.பி., விவசாயிகள், டில்லி எல்லையில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஹரியானா விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

'விவசாயிகள் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்து, கூட்டணியில் இருந்து விலகலாம்' என, ஜே.ஜே.பி.,யைச் சேர்ந்த, சில, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.அந்த உத்தரவு வெளியான நிலையில், கட்சி, எம்.எல்.ஏ.,க்களுடன், துஷ்யந்த் பேச்சு நடத்தினார். பின்னர், முதல்வர், மனோகர் லால் கட்டாருடன், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, அமித் ஷாவை சந்தித்து பேசினார்.இதையடுத்து, அவர் பிரதமர், மோடியை நேற்று சந்தித்து பேசினார். இதில் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மிகக் குறிப்பாக, விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டணி அரசில் இருந்து, ஜே.ஜே.பி., விலகலாம் என்று பரவலாக பேசப்படும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துஉள்ளது.

மூலக்கதை