மொபைல்ஆப் மூலம் கடன்: குழு அமைத்தது ஆர்.பி.ஐ.,

தினமலர்  தினமலர்
மொபைல்ஆப் மூலம் கடன்: குழு அமைத்தது ஆர்.பி.ஐ.,

மும்பை :'மொபைல்ஆப்' மூலம் கடன் வழங்குவதில் மோசடி நடந்துள்ள நிலையில், ஆன்லைன் மற்றும் மொபைல்ஆப்மூலம் கடன் வழங்குவதை முறைபடுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க, ரிசர்வ் வங்கி பணிக் குழுவை அமைத்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த சிலர், மொபைல்ஆப் மூலம் கடன் வழங்கி, அதிக வட்டி வசூலிப்பதுடன், கடன் வாங்கியோருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் பிரச்னை சமீபத்தில் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகின்றது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
'ஆன்லைன்' மூலமாகவும், மொபைல்ஆப் மூலமாகவும் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில், ஆலோசனைகள் வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர் ஜெயந்த் குமார் தாஷ் தலைமையில், ஒரு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதை முறைப்படுத்தவும், அதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும், இந்தக் குழு ஆலோசனைகளை வழங்கும். மேலும், கடன் வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது போன்றவற்றுக்கு தேவையான வழிமுறைகளையும் உருவாக்க, இந்தக் குழு ஆலோசனை வழங்கும்.இதன் மூலம், மோசடிகள் நடப்பதை தடுப்பதுடன், டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதை முறைப்படுத்த முடியும். இந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் தன் அறிக்கையை அளிக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை