மயிலாப்பூரில் போட்டி? கமல்ஹாசன் பேட்டி!

தினமலர்  தினமலர்
மயிலாப்பூரில் போட்டி? கமல்ஹாசன் பேட்டி!

கோவை:''மயிலாப்பூர் தொகுதியில், நான் போட்டியிடுவதாக கூறுவது, தகவலே,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் தெரிவித்தார்.

கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், தேர்தல் பிரசாரம் செய்து வந்த கமல், நேற்று தொழில் துறைக்காக, ஏழு அம்ச கொள்கைகளை வெளியிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:கம்ப்யூட்டர், குடும்ப பெண்களுக்கு மாத சம்பளம் தருவது போன்றவை, இலவசங்கள் அல்ல; மனித வளத்தின் மீது அரசு செய்யும் முதலீடு. இலவசம் என எதுவும் சொல்லவில்லை. மாணவர்களுக்கு வழங்கும், 2 ஜி.பி., டேட்டாவில், கல்வி கற்க முடியுமா என்பது சந்தேகம்.

நாங்கள் ஜாதியை பார்க்க மாட்டோம்; சாதனையை தான் பார்ப்போம். சட்டசபை தேர்தலில், கண்டிப்பாக போட்டியிடுவேன்; மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறுவது தகவலே.
வேளாண் திருத்த சட்டத்தை அமல்படுத்த தடை விதித்திருக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி. இனியாவது, மத்திய அரசு, பேச்சை துவக்க வேண்டும். நண்பர் ரஜினி, வீட்டுச் சிறையில் இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

கோவையில், கமல் தங்கியிருந்த ஓட்டல் அரங்கில், போட்டோ எடுக்கும் நிகழ்வு நடந்தது. போட்டோ எடுக்க விரும்பியவர்களுக்கு, கட்சி சார்பில், டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. டோக்கன் இருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். 'கமலை யாரும் தொடக்கூடாது; நெருங்கி நிற்கக் கூடாது; கை குலுக்கக்கூடாது' என, கட்சியினர் அறிவித்த வண்ணம் இருந்தனர். அனைவருக்கும் கை கூப்பி வணக்கம் செலுத்திய கமல், யாருக்கும் கை நீட்டி விடக்கூடாது என்பதற்காக, இரு கரங்களையும் இறுக்க பிடித்துக் கொண்டார்.

மூலக்கதை