அதிபர் டிரம்பின் பதவி தப்புமா?

தினமலர்  தினமலர்
அதிபர் டிரம்பின் பதவி தப்புமா?

வாஷிங்டன்:'பார்லி., மீது தாக்குதல் நடத்த ஆதரவாளர்களை துாண்டிய குற்றச்சாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க முடியாது' என, துணை அதிபர், மைக் பென்ஸ் உறுதியுடன் கூறியுள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்க அவரை வலியுறுத்தி, பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பதவியில் இருந்து விலக, ஒரு வாரமே உள்ள நிலையில், டிரம்பை பதவியில் இருந்து நீக்குவதற்காக, பார்லி.,யில் ஓட்டெடுப்பு நடக்கிறது.கடந்தாண்டு, நவ., 3ல் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர், வரும், 20ம் தேதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையே, 'தேர்தலில் மோசடி நடந்துள்ளது' என, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகளை, நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.

வன்முறை

இந்நிலையில், தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, பார்லி.,யின் கூட்டுக் கூட்டம், கடந்த, 6ம் தேதி நடந்தது. அப்போது, டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், பார்லிமென்ட் கட்டடம் இடம்பெற்றுள்ள, கேப்பிடோல் ஹில் பகுதியிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

டிரம்ப், வரும், 20ம் தேதி பதவியில் இருந்து விலக உள்ள நிலையில், 'வன்முறையைத் துாண்டும் வகையில் அவர் பேசியதால், அதிபர் பதவியில் இருந்து அவரை முன்னதாகவே நீக்க வேண்டும்' என, ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக, பார்லி.,யில் கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 'அரசியல் சாசனத்தின், 25வது பிரிவைப் பயன்படுத்தி, டிரம்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, ஜனநாயக கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த சட்டப் பிரிவின்படி, ஒருவர், அதிபர் பதவியில் இருப்பதற்கான தகுதியை இழக்கும் நேரத்தில், மாற்று ஏற்பாடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், அதிபராக இருந்த ஜான் எப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட போது, இந்த சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டது.அதன்படி, துணை அதிபர் மற்றும் அமைச்சரவையின் பெரும்பான்மை அல்லது பார்லி., நியமிக்கும் குழுவின் பெரும்பான்மை ஒப்புதலுடன், மாற்று ஏற்பாடு செய்ய முடியும்.'இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, டிரம்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, குடியரசு கட்சியைச் சேர்ந்த, துணை அதிபர், மைக் பென்ஸை, ஜனநாயகக் கட்சி கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர், நான்சி பெலோசிக்கு, மைக் பென்ஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'ஒருவருக்கு தண்டனை அளிப்பதற்காக, 25வது சட்டப் பிரிவு சேர்க்கப்படவில்லை. ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த விரும்பவில்லை' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, 'அரசியல் சாசனத்தின், 25வது பிரிவைப் பயன்படுத்தி, டிரம்பை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை, துணை அதிபர், மைக் பென்ஸ் எடுக்க வேண்டும்' என, பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு ஆதரவாக, 223 பேரும், எதிராக, 205 பேரும் ஓட்டளித்தனர். குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒருவர், தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளார். அதே நேரத்தில், ஐந்து பேர் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.

இரண்டாவது முறைவன்முறையைத் துாண்டும் வகையில் பேசிய குற்றத்துக்காக, அதிபர் டிரம்புக்கு எதிராக பார்லியில் கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன் மீதான விவாதம் நடக்க உள்ளது.அமெரிக்க வரலாற்றிலேயே, ஒரு அதிபருக்கு எதிராக, இரண்டாவது முறையாக, கண்டனத் தீர்மானம் மீது, பார்லியில் விவாதம் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜோ பைடனுக்கு எதிராக பொய் வழக்குகள் தொடரும்படி, ஐரோப்பிய நாடான உக்ரைனின் அதிபருக்கு நெருக்கடி கொடுத்ததாக, டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்காக, அந்த நாட்டுக்கு வழங்க வேண்டிய ராணுவ உதவியை அவர் நிறுத்தி வைத்திருந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, 2019, டிச.,ல் பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானம் நிறை வேறியது.

ஆனால், 2020, பிப்.,ல் செனட் சபை அதை நிராகரித்தது.தொடரும் எதிர்ப்புகண்டன தீர்மானம் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குடியரசு கட்சியிலேயே, டிரம்பை எதிர்ப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னாள் துணை அதிபர் டிக் சென்னியின் மகளான, லிஸ் சென்னி அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். கட்சியில், மூன்றாம் நிலை தலைவராக உள்ளவர் லிஸ்.

ஏற்கனவே, செனட் சபை எம்.பி.,யான மிட்ச் மெக்கோனல் உள்ளிட்டோர், டிரம்புக்கு எதிராக ஓட்டளிக்க உள்ளதாக கூறியுள்ளனர். அதேபோல், ஆடம் கின்சிங்கர், ஜான் காட்கோ, பிரெட் அப்டான், ஜேமி ஹெரீரா பியூட்லர் உள்ளிட்டோரும், டிரம்புக்கு எதிராக ஓட்டளிக்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.இவ்வளவு களேபரம் நடந்து வரும் நிலையிலும், டிரம்ப், தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.

வன்முறை சம்பவம் நடந்த பிறகு, முதல் முறையாக, நேற்று முன்தினம் பொது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, 'நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டில் பேச்சு சுதந்திரம் நசுக்கப்படுகிறது. கண்டன தீர்மானம் நிறைவேற்றி, என்னை பதவியில் இருந்து துாக்கியடிக்க நினைக்கின்றனர்.

இதுபோன்ற பூச்சாண்டி மிரட்டல்களை நான் பார்த்து விட்டேன்' என, டிரம்ப் கூறியுள்ளார்.படை தளபதிகள் அறிக்கைஅமெரிக்காவின் கூட்டுப் படைகளைச் சேர்ந்த, எட்டுக்கும் மேற்பட்ட மூத்த தளபதிகள் இணைந்து, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதுபோன்று கூட்டு அறிக்கை வெளியிடுவது மிகவும் அரிது. அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

பேச்சு சுதந்திரம் என்பது, வன்முறையில் ஈடுபடும் அதிகாரத்தை வழங்கவில்லை. நாட்டின் அரசியல் சாசனத்தை கடைப்பிடிக்க வேண்டியது அனைவருடைய பொறுப்பு. அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.தடை விதித்தது யுடியூப்வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, செய்திகளை வெளியிட்டதாக, அதிபர் டிரம்பின் கணக்குகளை, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்கள் முடக்கி வைத்துள்ளன. இந்த நிலையில், 'யுடியூப்' சமூக வலை தளமும், டிரம்புக்கு, ஒரு வாரம் தடை விதித்துள்ளது.

மூலக்கதை