சென்னை உள்ளிட்ட 11 நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது 'கோவாக்சின்'

தினமலர்  தினமலர்
சென்னை உள்ளிட்ட 11 நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது கோவாக்சின்

புதுடில்லி: 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்துள்ள, 'கோவாக்சின்' எனப்படும் கொரோனா தடுப்பூசி, சென்னை, பெங்களூரு, டில்லி உள்ளிட்ட, 11 நகரங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்
பட்டது.தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, 'கோவாக்சின்' என்ற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

30 கோடி 'டோஸ்'


இந்த மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு, சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இதுவரை, 30 கோடி 'டோஸ்' கோவாக்சின் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்துள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், 10 லட்சம் டோஸ் மருந்துகள், மத்திய அரசு பயன்பாட்டுக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஐதராபாத் நகரில் உள்ள 'பாரத் பயோடெக்' நிறுவன தொழிற்சாலையில் இருந்து, 55 லட்சம் 'டோஸ்' தடுப்பு மருந்துகள், பல்வேறு மாநிலங்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.சென்னை, டில்லி, ஆந்திராவின் கானாவரம், அசாமின் கவுஹாத்தி, பீஹாரின் பாட்னா, ஹரியானாவின் குருஷேத்திரம், கர்நாடகாவின் பெங்களூரு, மஹாராஷ்டிராவின் புனே, ஒடிசாவின் புவனேஸ்வர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உ.பி.,யின் லக்னோ ஆகிய, 11 நகரங்களுக்கு மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டன.

295 ரூபாய்க்கு விற்பனை



இந்த மருந்து, ஒரு டோஸ், வரிகள் தவிர்த்து, 295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 'இதை, 28 டிகிரி செல்ஷியஸ் தட்பவெப்ப நிலையில், பாதுகாத்து வைக்கலாம்' என, நிபுணர்கள் தெரிவித்தனர்.

அதிகரிக்கும் சந்தேகம்: காங்., குற்றச்சாட்டு



சீரம் நிறுவன தயாரிப்பான 'கோவிஷீல்டு' மற்றும் பாரத் பயோடெக் தயாரிப்பான, 'கோவாக்சின்' ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு, அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணி, நாளை மறுதினம் துவங்குகிறது.'தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள், இரண்டில் ஒரு மருந்தை தங்கள் இஷ்டப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்படாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, காங்கிரஸ் எம்.பி., மணிஷ் திவாரி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:'கோவாக்சின்' தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், அதன் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்கள் விருப்பப்படும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அனுமதி இல்லை என, மத்திய அரசு தெரிவித்து இருப்பது கவலை அளிக்கிறது. இந்த அறிவிப்பு, 'கோவாக்சின்' தடுப்பு மருந்தின் செயல் திறன் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை