500 அடி நீள சுரங்கப்பாதை வழியாக காஷ்மீருக்குள் சதி!

தினமலர்  தினமலர்
500 அடி நீள சுரங்கப்பாதை வழியாக காஷ்மீருக்குள் சதி!

ஜம்மு :ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து, 492 அடி நீள சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளதை, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். இதன் மூலம், காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019, ஆகஸ்டில் நீக்கப்பட்டு, அந்த மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அதன்பிறகு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்தது.

அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவதும் குறைந்தது. ஊடுருவலைத் தடுக்க, எல்லையில் பாதுகாப்புப் பணியும் பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே, சம்பா, கதுவா மாவட்டங்களில், பி.எஸ்.எப்., வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பாகிஸ்தானில் இருந்து ஊடுருவுவதற்கான வழிகள் ஏதும் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

பலமுறை முயற்சி



அப்போது, கதுவா மாவட்டத்தில், சர்வதேச எல்லையை ஒட்டி, 492 அடி நீள சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதை, பி.எஸ்.எப்., வீரர்கள் கண்டுபிடித்தனர்.இது குறித்து, படையின் ஜம்மு பிராந்திய, ஐ.ஜி.,யான, என்.எஸ். ஜாம்வால் கூறியதாவது:இந்த சுரங்கப் பாதை, பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட, ஷகேர்கர் பகுதியில் இருந்து, நம் எல்லை வரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஷகேர்கர் பகுதியில் தான், பாக்., பயங்கரவாதிகள் முகாம் அமைத்து, நம் நாட்டுக்குள் ஊடுருவ, இதற்கு முன், பலமுறை முயற்சி செய்துள்ளனர்.இந்த சுரங்கப்பாதை அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள மணல் மூட்டைகளில், பாகிஸ்தானின் சின்னம் உள்ளது. பயங்கரவாதிகளை, காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்வதற்காக, இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருக்கலாம்.

90 அடி ஆழம்



சரியான நேரத்தில் கிடைத்த தகவலின்படி, இந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சர்வதேச எல்லையில், கடந்த, ஆறு மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, மூன்றாவது சுரங்கம் இது. கடந்த, 10 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட, ஒன்பதாவது சுரங்கம்.இந்த சுரங்கம், 90 அடி ஆழத்தில், மூன்று அடி அகலத்தில் அமைந்துள்ளது. இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதைகளும், இதேபோல வடிவமைக்கப்பட்டிருந்தன.இங்கு கிடைத்துள்ள மணல் மூட்டைகளில், 2017ம் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இது பழைய சுரங்கப் பாதையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதே நேரத்தில், கடந்த சில மாதங்களில், இந்த வழியாக யாரும் ஊடுருவியிருக்க வாய்ப்புஇல்லை.

இந்தப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. அதனால், இந்த வழியாக, கடந்த சில மாதங்களில் யாரும் ஊடுருவியிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்தாண்டு அக்., 28 மற்றும் நவ., 22ல், சம்பா மாவட்டத்தில், இரண்டு இடங்களில், இதுபோன்ற சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள், துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடும் குளிரில் ஸ்ரீநகர்



காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஸ்ரீநகரில், மைனஸ் 7.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகிஉள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் பதிவான மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலை இதுவாகும். காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.

மூலக்கதை