டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

தினமலர்  தினமலர்
டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

வாஷிங்டன்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக 2வது முறையாக பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 197 பேர் ஓட்டு போட்டனர்.அமெரிக்க வரலாற்றில், முதல்முறையாக ஒரு அதிபருக்கு எதிராக 2வது முறை பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, நவ., 3ல் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர், வரும், 20ம் தேதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே, 'தேர்தலில் மோசடி நடந்துள்ளது' என, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகளை, நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, பார்லி.,யின் கூட்டுக் கூட்டம், கடந்த, 6ம் தேதி நடந்தது. அப்போது, டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், பார்லிமென்ட் கட்டடம் இடம்பெற்றுள்ள, கேப்பிடோஸ் ஹில் பகுதியிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நேற்று, டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம், பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சியின் எம்.பி.,க்களும் ஆதரவு அளித்தனர். மொத்தம் 232 பேரில், 187 பேர் டிரம்ப்பிற்கு எதிராக ஓட்டளித்தனர்.

பிரதிநிதிகள் சபையில், அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், செனட் சபை 19ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள்(ஜன.,20) ல் ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.

அதற்கு பிறகு, செனட் சபை, இந்த தீர்மானம் குறித்து முடிவெடுக்கலாம் என தெரிகிறது.

மூலக்கதை