சிமென்ட் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி

தினமலர்  தினமலர்
சிமென்ட் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி

சென்னை:கட்டுமானத் திட்டங்களை முடக்கும் வகையில், உயர்ந்துள்ள சிமென்ட் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஊரடங்கால் முடங்கிய கட்டுமானத்துறையில், வழக்கமான பணிகள் படிப்படியாக துவங்கி வருகின்றன. இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், சிமென்ட், டி.எம்.டி., கம்பிகள் விலை உயர்ந்துள்ளது.இப்பிரச்னையை தீர்ப்பதற்கான பரிந்துரைகள் வழங்க, பிரதமர் அலுவலக உயரதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சிமென்ட் உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டு வைத்து, செயற்கையாக விலையை உயர்த்துவதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் குற்றம்சாட்டினார். சிமென்ட் உற்பத்தியாளர்களின் முறையற்ற கூட்டணியை உடைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன.

இது குறித்து கட்டுமானத்துறையினர் கூறியதாவது:மத்திய அரசின் இந்த அதிரடி முடிவு, சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர்கள் கட்டுமான துறை மீது குற்றச்சாட்டுகளை கூற ஆரம்பித்து உள்ளனர்.தமிழகத்தில், உற்பத்தி செலவை விட பலமடங்கு அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள சிமென்ட் விபரங்கள் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுஉள்ளது.

ஒரு மூட்டை சிமென்ட் உற்பத்தி செலவு, 200 ரூபாயைத் தாண்டாத நிலையில், சந்தையில், 420 ரூபாய்க்கு விற்பதும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை