ரஜினி முடிவு - ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
ரஜினி முடிவு  ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்

அரசியல் கட்சி தொடங்கி, 2021 சட்டசபை தேர்தலை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் அவரோ, தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்தவர் அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனால் அதை ஏற்காத ரசிகர்கள் பலர் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், ரஜினியின் நிலைபாடு குறித்து தற்போது நடிகர் ராகவா லாரன்சும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி என்னையும் பலர் அழைத்தனர். இப்போதும் ரஜினியின் முடிவை மாற்றுமாறு என்னைக் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.

அதுகுறித்து தெளிவுபடுத்தவே இப்போது இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். அதாவது, ரஜினியின் முடிவினால் மற்ற ரசிகர்களுக்கு எத்தனை வலி உள்ளதோ அதே வலி எனக்கும் உள்ளது. இருப்பினும் ரஜினி அவர்கள் வேறு ஏதேனும் காரணம் சொல்லி அரசியல் கட்சி தொடங்காமல் பின்வாங்கினால் அவரை நானே வற்புறுத்தியிருப்பேன். ஆனால் அவரோ தனது உடல்நிலையை காரணமாக சொல்லி பின்வாங்கியிருக்கிறார்.

இந்த நேரத்தில், நாம் அவரது முடிவை மாற்றுமாறு வற்புறுத்தி, அவரும் முடிவை மாற்றிக்கொண்டு அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, ஒருவேளை அவருக்கு ஏதேனும் நடந்து விட்டால் அந்த குற்ற உணர்வுடன் வாழ்நாள் முழுக்க வாழமுடியாது. அவரது உடல்நிலை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் எப்போதும் அவர்தான் என்னுடைய குருநாதர். அவருடைய ஆரோக்கியத்திற்காக தொடர்ந்து அவருக்காக பிரார்த்தனை செய்வதே நம்முடைய வேலை என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

மூலக்கதை