வெப் சீரிஸ் பார்க்கத்தான் பிடிக்கும் நடிக்க பிடிக்காது : ஜெயம்ரவி

தினமலர்  தினமலர்
வெப் சீரிஸ் பார்க்கத்தான் பிடிக்கும் நடிக்க பிடிக்காது : ஜெயம்ரவி

ஜெயம் ரவியின் 25வது படமான பூமி நாளை(ஜன., 14) ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: இந்த படத்தை எனது 25வது படம் என்பதால் நான் அதற்கு முக்கியத்தும் தரவில்லை. என்னுடைய எல்லா படத்தையும் முதல் படம் போன்றே நினைத்து நடிக்கிறேன். நண்பர்கள்தான் இதை 25வது படம் என்று குறிப்பிடுகிறார்கள். அவர்களுக்காக அதை நானும் ஏற்று அந்த படம் மக்கள் பிரச்சினை பேசும் முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக விவசாய படத்தில் நடித்தேன்.

உலகிற்கே விவசாயம்தான் முக்கியம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் விவசாயத்தை விட்டும், விவசாயிகளை விட்டும் விலகியே நிற்கிறோம். அதற்கு காரணம் என்ன எல்லோரும் விவசாயம் பக்கம் திரும்ப என்ன செய்ய வேண்டும் என்பதை படம் பேசுகிறது. இது எல்லோருக்குமான படமாக இருக்கும்.

ஒரு படம் முடிந்த பிறகும் கையில் வைத்துக் கொண்டிருப்பது ஆபத்தானது. கதை வெளிவந்து விடும், முக்கியமான காட்சி வேறொரு படத்தில் இடம்பெற்று விடும். முக்கியமான பிளாக்குகள் வெளியாகிவிடும் எனவே தான் பூமியை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்வோம். மக்கள் ஓடிடியில் படத்தை பார்த்தாலும் ஒரு திரைப்படத்துக்கான மரியாதையை தருவார்கள் என்று நம்புகிறேன்.

தியேட்டர்களுக்கும், ஓடிடிக்கும் நடக்கும் சண்டை எங்கள் குடும்ப சண்டை. குடும்பத்துக்குள் சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும் அதை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். சண்டை பகையாக மாறிவிடக்கூடாது என்பது என் கருத்து.

இப்போது வெப் சீரிஸ் வளர்ந்து வருகிறது. எனக்கு வெப் சீரிஸ் பார்க்கத்தான் பிடிக்குமே தவிர நடிக்க பிடிக்காது. காரணம் என் குடும்பமும், நானும் சினிமாவில் ஊறிக் கிடப்பவர்கள். தெரிந்த விஷயத்தை செய்யத்தான் எனக்கு பிடிக்கும். என்றார்.

மூலக்கதை