காயமே இது மெய்யடா: சந்தேகத்தில் பும்ரா, அஷ்வின் | ஜனவரி 12, 2021

தினமலர்  தினமலர்
காயமே இது மெய்யடா: சந்தேகத்தில் பும்ரா, அஷ்வின் | ஜனவரி 12, 2021

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்படுவது தொடர்கிறது. வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் காயம் காரணமாக பிரிஸ்பேன் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய தொடருக்கு முன் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா காயமடைந்தனர். ஆஸ்திரேலியா  செல்வதற்கு முன் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி விலகினார். தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த முதல் டெஸ்டில் முகமது ஷமி, வலது  முழங்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக நாடு திரும்பினார்.இந்திய அணி கேப்டன் கோஹ்லி, மனைவி அனுஷ்கா சர்மா பிரசவத்திற்காக இந்தியா திரும்பினார். மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில்  கணுக்கால் காயமடைந்த உமேஷ் யாதவ் வெளியேறினார். பயிற்சியின் போது லோகேஷ் ராகுல், வலதுகை மணிக்கட்டில் சுளுக்கு ஏற்பட, நாடு  திரும்பினர்.

ஜடேஜா விலகல்

சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இந்த வரிசையில் தற்போது  பும்ராவும் இணைவார் தெரிகிறது. சிட்னி டெஸ்ட் மூன்றாவது நாள் மாலையில் பந்து வீசிய போது பும்ரா, தனது வயிற்றுப்பகுதியில் ஏதோ  பிரச்னை இருப்பதாக ‘சிக்னல்’ தந்தார். உடனே பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல், சென்று பும்ராவிடம் ஆலோசித்தார். மீண்டும் பவுண்டரி எல்லை அருகே சென்று பும்ரா, நிதின் படேலிடம்  பேசினார். இருப்பினும் தொடர்ந்து பவுலிங் செய்தார். மொத்தம் வீசப்பட்ட 87 ஓவரில் பும்ரா மட்டும் 25 ஓவர்கள் வீசினார். இரு அணியிலுள்ள  வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக ஓவர் வீசியது பும்ரா தான். கடந்த மூன்று டெஸ்டில் மொத்தம் 117.4 ஓவர்கள் வீசினார். 

பும்ரா சந்தேகம்

தற்போது காயத்தின் தன்மை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார் பும்ரா. இதனால் இவர் பிரிஸ்பேன்  டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் ஒருவர் கூறுகையில்,‘‘பும்ரா, பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாட மாட்டார். இங்கிலாந்து தொடரில் கட்டாயம் பங்கேற்பார்,’’  என்றார்.

 

சிராஜ் ‘தலைவர்’

ஒருவேளை பும்ரா பங்கேற்காத பட்சத்தில், முகமது சிராஜ் தலைமையில் நவ்திப் சைனி, ஷர்துல் தாகூர்  அல்லது நடராஜன் இணைந்து வேகப்பந்து வீச்சை கவனித்துக் கொள்வர். இதேபோல சிட்னியில் கடைசி 42.4 ஓவர்கள் பேட்டிங் செய்த அஷ்வின் (முதுகுவலி), ஹனுமா விஹாரி (தொடை பின்பகுதி) காயத்தால்  அவதிப்படுகின்றனர். இதில் விஹாரி ஏற்கனவே விலகிவிட்டார். அஷ்வின் பங்கேற்பது சிக்கலாக உள்ளது. இவர் இல்லையெனில், சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் இடம் பெறலாம். 

 

நீளும் பட்டியல்

ஆஸ்திரேலிய தொடருக்கு முன் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் விலகினர். தற்போது ஆஸ்திரேலிய தொடரில் காயமடைந்த வீரர்கள் விபரம்:

வீரர் காயம் மாற்று வீரர்

வருண் சக்ரவர்த்தி தோள்பட்டை நடராஜன்

முகமது ஷமி வலதுகை எலும்பு முறிவு ஷர்துல் தாகூர்

உமேஷ் யாதவ் கணுக்கால் நவ்தீப் சைனி

லோகேஷ் ராகுல் மணிக்கட்டு சுளுக்கு ––––––––––

ஜடேஜா இடது கை பெருவிரல் வாஷிங்டன் சுந்தர்

 

லேசான காயத்துடன் சந்தேகத்தில் இருப்பவர்கள்

விஹாரி தொடை பின்பகுதி

பும்ரா அடிவயிறு காயம்

அஷ்வின் முதுகு வலி

மயங்க் அகர்வால் வலது கை எலும்பு முறிவு

ரிஷாப் பன்ட் இடது முழங்கை

 * மனைவி பிரசவத்திற்காக கோஹ்லி தாயகம்  திரும்பினார்

 

 

சுந்தருக்கு வாய்ப்பு

பிரிஸ்பேன் டெஸ்டில் இருந்து ஜடேஜா விலகினார். இவரது இடத்தில் மற்றொரு சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், நான்காவது டெஸ்டில் அறிமுக வாய்ப்பு பெறுவார் என நம்பப்படுகிறது.

 

‘இரண்டாவது’ சோகம்

ஆஸ்திரேலிய தொடரின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் ஒரு முன்னணி பவுலர் காயத்தால் பந்து வீசாமல் இருந்துள்ளார். முதல் டெஸ்டில் ஷமி, இரண்டாவது டெஸ்டில் உமேஷ், மூன்றாவது டெஸ்டில் ஜடேஜா என மூவரும் காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசவில்லை.

 

சேவக் ‘காமெடி’

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்கள் பலர் காயம் அடைந்தது குறித்து முன்னாள் வீரர் சேவக் கூறுகையில்,‘‘பிரிஸ்பேன் டெஸ்டில் களமிறங்கும் இந்திய அணியில் உடற்தகுதியுடன் உள்ள 11 வீரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால், நான் ஆஸ்திரேலியா செல்லத் தயாராக இருக்கிறேன்,’’ என காமெடியாக தெரிவித்தார். 

மூலக்கதை