ஊரடங்கு போட்டுவிட்டு ஒய்யாரமாக சைக்கிள் ஓட்டிய பிரதமர்

தினமலர்  தினமலர்
ஊரடங்கு போட்டுவிட்டு ஒய்யாரமாக சைக்கிள் ஓட்டிய பிரதமர்

லண்டன்: உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் ஊரடங்கு போட்டார் பிரதமர் போரிஸ் ஜான்சன். அவரே அதனை மீறி சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் தொற்று பாதித்தவர்களை விட அதிகம் பேர் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. இதனால் தேசிய அளவிலான ஊரடங்கை கடந்த வாரம் பிரதமர் போரீஸ் ஜான்சன் பிறப்பித்தார்.

இந்நிலையில் பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது வீட்டிலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஸ்டார்ட்போர்ட் பகுதியில் உள்ள ஒலிம்பிக் பூங்காவிற்கு சென்றுள்ளார். உடற்பயிற்சிக்காக அவர் சென்றதாக பிரதமர் அலுவலகம் கூறுகிறது. இருப்பினும் ஊரடங்கு போட்டுவிட்டு அதனை பிரதமரே மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் பிரதமரின் நடவடிக்கையை கண்டித்துள்ளது. இதனால் அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.


நகரின் காவல் துறை ஆணையர் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். பொது வாழ்வில் இருப்பவர்களை மக்கள் ரோல் மாடலாக கருதுவதாகவும் தெரிவித்தார். உடற்பயிற்சி செய்ய கொரோனா விதிகளில் அனுமதி உண்டு என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படியே போரீஸ் ஜான்சன் செயல்பட்டதாகவும் கூறினர். ஆனால் உடற்பயிற்சிக்காக ஒருவர் எவ்வளவு தூரம் வெளியில் செல்லலாம், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தியோ, வாகனத்தை ஓட்டிக்கொண்டோ செல்லலாமா என்பது பற்றி விளக்கமளிக்கவில்லை.

மூலக்கதை