ஆயுதம் ஏந்தி போராட்டம்? : அமெரிக்காவில் அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
ஆயுதம் ஏந்தி போராட்டம்? : அமெரிக்காவில் அதிர்ச்சி

வாஷிங்டன் :அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பதவியேற்கும் விழா நடக்கவுள்ள, 20ம் தேதி வரை, அமெரிக்காவின்,50 மாகாணங்களிலும், ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் ஈடுபட, அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள்திட்டமிட்டுள்ளதாக, உளவு செய்திகள் தெரிவிக்கின்றன.அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன், 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருடன், இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவியேற்க உள்ளார்.

மோசடி



'அதிபர் பதவிக்கான தேர்தலில் மோசடி நடந்துள்ளது. தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது' என, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.தேர்தல் முடிவுகளை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதற்காக, பார்லி.,யின் கூட்டுக் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அப்போது, 'கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து, நுாற்றுக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.இந்த திடீர் தாக்குதல் மற்றும் வன்முறையை, அமெரிக்க போலீஸ், உளவு அமைப்புகள் எதிர்பார்க்கவில்லை.

புதிய அதிபராக, ஜோ பைடன், 20ம் தேதி பதவியேற்க உள்ளதால், அனைத்து அமைப்புகளும் உஷார் நிலையில் உள்ளன.பதவியேற்பு விழா நடக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் வேறு சில அமைப்புகள்,போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து, தங்கள் இணையதளங்களில் செய்தி வெளியிட்டுள்ளன. வாஷிங்டனில், 17 - 20ம் தேதி வரையிலும், மற்ற மாகாணங்களில், 16 - 20ம் தேதி வரையிலும் பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, 17ம் தேதி, ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவு அமைப்பான, எப்.பி.ஐ., எச்சரித்துள்ளது.

தீர்மானம்



'டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம் வெற்றி அடைந்து, பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்' என, அவரது ஆதரவாளர்கள், இணையதளங்களில் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதைத் தவிர, 20ம் தேதி பதவியேற்பு விழாவின்போது, வாஷிங்டனை முற்றுகையிட்டு, பேரணி நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து, எப்.பி.ஐ., விசாரித்து வருகிறது.முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பைடனுக்கு ஆபத்து?



ஜோ பைடன், கமலா ஹாரிஸ், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இது தொடர்பான தகவல்களை உளவு அமைப்புகள் சேகரித்து வருகின்றன. அவர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.டிரம்ப் ஆதரவாளர்கள், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதிபர் பதவியேற்பு விழாவை சீர்குலைக்கும் அபாயம் உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இதனால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வாஷிங்டனில், 24ம் தேதி வரை அவசர நிலையை பிறப்பித்துள்ளார், அதிபர் டொனால்டு டிரம்ப்.

இன்று ஓட்டெடுப்பு



வன்முறையைத் தூண்டியதாக, அதிபர் டிரம்ப் மீது, பார்லி.,யில் இரண்டு கண்டனத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீது, இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையில், ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. செனட் சபையில், இரண்டு கட்சிகளுக்கும், தலா, 50 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால், இந்த ஓட்டெடுப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை