ஓட்டலில் இந்திய வீரர்கள் தவிப்பு * கொரோனா கெடுபிடியால்... | ஜனவரி 12, 2021

தினமலர்  தினமலர்
ஓட்டலில் இந்திய வீரர்கள் தவிப்பு * கொரோனா கெடுபிடியால்... | ஜனவரி 12, 2021

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் ஓட்டலில் இந்திய வீரர்கள் அறைகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. தற்போது தொடர் 1–1 என சமனில் உள்ளது.

‘பார்டர்–கவாஸ்கர்’ கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட், பிரிஸ்பேனில் உள்ள வேகத்துக்கு சாதகமான காபா மைதானத்தில் ஜன. 15–19ல் நடக்கவுள்ளது.  சிட்னியில் அதிக கொரோனா பரவல் காரணமாக, இங்கிருந்து  பிரிஸ்பேன் வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்திய வீரர்கள் பிரிஸ்பேன் செல்ல மறுத்தனர். ஒருவழியாக சமாதானம் அடைந்து அங்கு சென்றனர்.  வீரர்கள் ஓட்டல் அறைகளை விட்டு வேறு தளத்துக்கு செல்லக் கூடாது.  தங்கள் அறைகளுக்குள் மாறி மாறி சென்று கொள்ளலாம்.  தேவையான படுக்கை வசதி, ‘டாய்லெட்டுகளை’ அவர்களே சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  பணியாளர்கள் செல்ல அனுமதி கிடையாது. தேவையான உணவுகளை வாங்க, உணவகம் செல்லக் கூடாது.  ‘ஆப்’ வழியாகத் தான் ஆர்டர் செய்ய வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்திய அணி தரப்பில் ஒருவர் கூறியது:

 எங்கள் அறையில் பூட்டப்பட்டுள்ளோம். நாங்களே ‘டாய்லெட்’ சுத்தம் செய்ய வேண்டும், அருகிலுள்ள இந்திய உணவகத்தில் இருந்து உணவுகள் அறைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. எங்களுக்கான தளத்தில் இருந்து எங்கும் செல்லமுடியாது. 

ஒட்டுமொத்த ஓட்டலும் காலியாகத் தான் உள்ளது. ஆனால் இங்குள்ள நீச்சல் குளம், ஜிம் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்த தடை உள்ளது. ஓட்டலில் உள்ள உணவகம், காபி ‘ஷாப்’ மூடப்பட்டுள்ளன. வேறு யாரும் இல்லாத நிலையிலும் இவைகளை பயன்படுத்த அனுமதி மறுப்பது வித்தியாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

கங்குலி தலையீடு: ஆஸி., அனுமதி

ஓட்டலில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து இந்திய அணி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓட்டல் நிர்வாகம் தரப்பில் கூறுகையில்,‘விதிகள் இந்திய அணிக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலிய அணிக்கும் பொருந்தும்,’ என்றனர். இந்திய கிரிக்கெட்  போர்டு தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா, தலைமை அதிகாரி ேஹமங் அமின் இந்த பிரச்னையை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டிடம் எடுத்துச் சென்றனர். இதையடுத்து வீரர்கள் ஓட்டலுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லவும், ‘ஜிம்’ பயன்படுத்தவும் அனுமதி தரப்பட்டது. தவிர சுத்தம் செய்யும் பணிகளில் ஓட்டல் பணியாளர்கள் ஈடுபடவும் சம்மதித்தனர். 

மூலக்கதை