கோஹ்லி ‘நம்பர்–3’: தரவரிசையில் பின்னடைவு | ஜனவரி 12, 2021

தினமலர்  தினமலர்
கோஹ்லி ‘நம்பர்–3’: தரவரிசையில் பின்னடைவு | ஜனவரி 12, 2021

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீரர் புஜாரா, 8வது இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 870 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர், அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின், மனைவியின் பிரசவம் காரணமாக நாடு திரும்பினார். சிட்னி டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (131, 81 ரன்), 900 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், 919 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார்.

சிட்னி டெஸ்டின் இரு இன்னிங்சிலும் அரைசதமடித்த இந்திய வீரர் புஜாரா (753 புள்ளி), 10வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய பகுதி நேர கேப்டன் அஜின்கியா ரகானே (756), 6வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் பொறுப்பாக விளையாடிய மற்ற இந்திய வீரர்களான ரிஷாப் பன்ட் (26வது இடம்), ஹனுமா விஹாரி (52வது), அஷ்வின் (89வது) முன்னேற்றம் கண்டனர்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய ‘சுழல்’ வீரர் அஷ்வின் (9வது இடம், 768 புள்ளி), வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (10வது இடம், 765 புள்ளி) பின்னடைவை சந்தித்தனர். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (908) தொடர்கிறார்.

‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (428 புள்ளி) 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (446) நீடிக்கிறார். விண்டீசின் ஜேசன் ஹோல்டர் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

 

டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து வீரரானார் கேன் வில்லியம்சன் (919 புள்ளி). ஏற்கனவே இவர், 2018, டிசம்பரில் வெளியான தரவரிசையில் 915 புள்ளிகள் பெற்றிருந்தார். தவிர, 1985 டிசம்பரில் வெளியான தரவரிசையில் முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்டு ஹாட்லீ, 909 புள்ளிகளுடன் பவுலர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார்.

மூலக்கதை