சிறந்த கேப்டன் ரகானே: பிராட் ஹாடின் பாராட்டு | ஜனவரி 12, 2021

தினமலர்  தினமலர்
சிறந்த கேப்டன் ரகானே: பிராட் ஹாடின் பாராட்டு | ஜனவரி 12, 2021

சிட்னி: ‘‘சிட்னி டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷாப் பன்ட்டை முன்னதாக களமிறக்கிய ரகானே, சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்தார்,’’ என, பிராட் ஹாடின் தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. கடைசி நாள் ஆட்டத்தில் 309 ரன்களை விரட்டிய இந்திய அணிக்கு, ரிஷாப் பன்ட், புஜாரா, அஷ்வின், விஹாரி ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் கைகொடுக்க தோல்வியை தவித்தது.

இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிராட் ஹாடின் கூறியது: சிட்னி டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் விளையாடிய விதம் பாராட்டுக்குரியது. பேட்டிங் வரிசையில் விஹாரிக்கு முன்னதாக ரிஷாப் பன்ட்டை களமிறக்கியது கேப்டன் ரகானேவின் துணிச்சலான முடிவு. இதற்கேற்ப அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பன்ட், நம்பிக்கை தந்தார். இம்முடிவு, ரகானே சிறந்த கேப்டன் என்பதற்கான சான்று. இப்போட்டியில் இவர், கேப்டனாக தோல்வியடையவில்லை. இவரது முடிவு சகவீரர்களுக்கும் ஊக்கமாக இருந்தது.

புஜாராவுக்கு இணையான விஹாரியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ‘ரெகுலர்’ கேப்டன் கோஹ்லி, முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல், போட்டியின் போது ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தால் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இப்போட்டியின்மூலம் உண்மையான பலத்தை வெளிப்படுத்தினர்.

இவ்வாறு ஹாடின் கூறினார்.

 

டெஸ்ட் அரங்கில் ரகானே தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் வலம் வருகிறது. இதுவரை 4 போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ள இவரது தலைமையிலான இந்திய அணி 3 வெற்றி, ஒரு ‘டிரா’வை பெற்றது.

மூலக்கதை