தமிழக அணி அசத்தல் வெற்றி | ஜனவரி 12, 2021

தினமலர்  தினமலர்
தமிழக அணி அசத்தல் வெற்றி | ஜனவரி 12, 2021

கோல்கட்டா: சையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில் தமிழக அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசாம் அணியை வீழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் நடத்தப்படும் தேசிய ‘டுவென்டி–20’ சாம்பியன்ஷிப் தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ கர்நாடகா, மும்பை, டில்லி உள்ளிட்ட 38 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், அசாம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

அசாம் அணிக்கு கேப்டன் ரிஷவ் தாஸ் (15), டெனிஷ் தாஸ் (15) ஏமாற்றினர். ரியான் பராக் (24), ராஜாகுதீன் அகமது (29) ஆறுதல் தந்தனர். அசாம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. தமிழகம் சார்பில் முகமது, சாய் கிஷோர், முருகன் அஷ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு ஹரி நிஷாந்த், நாராயண் ஜெகதீசன் ஜோடி நம்பிக்கை அளித்தது. அருப் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார் நிஷாந்த். பிரிதம் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த ஜெகதீசன், 38 பந்தில் அரைசதம் எட்டினார். தாஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இவர் வெற்றியை உறுதி செய்தார்.

தமிழக அணி 15 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெகதீசன் (78 ரன், 50 பந்து, 3 சிக்சர், 8 பவுண்டரி), நிஷாந்த் (47) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை