உலக பட்டியலில் 11இந்திய நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
உலக பட்டியலில் 11இந்திய நிறுவனங்கள்

மும்பை:உலகெங்கிலும் உள்ள, அதிக சந்தை மதிப்பு கொண்ட, 500 நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த, 11 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

மேலும், அதிக சந்தை மதிப்புடைய நிறுவனங்களை கொண்ட நாடுகளின் வரிசையில், இந்தியா, 10 இடத்தைப் பிடித்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் முதலீட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ள, ‘ஹுருன்’ நிறுவனத்தின், ‘ஹுருன் குளோபல் 500’ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:உலகின் மதிப்பு மிக்க, 500 நிறுவனங்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த, 11 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த, 11 நிறுவனங்களின் மொத்த மதிப்பு, 14 சதவீதம் அதிகரித்து, 805 பில்லியன் டாலர் அதாவது, 58.77 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கிட்டத்தட்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மூன்றில் ஒரு பங்காகும்.இந்த, 11 நிறுவனங்களும் தனியார் துறையைச் சேர்ந்தவையாகும்.

முகேஷ் அம்பானியின்,‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’இந்த,11 நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த டிசம்பர், 1ம் தேதி நிலவரப்படி, இதன் மதிப்பு, 20.5 சதவீதம் அதிகரித்து, 12.32 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. உலகளவிலான பட்டியலில், இந்த நிறுவனம், 54வது இடத்தைப் பிடித்துள்ளது.‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ மதிப்பு, 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனம், உலகளவிலான பட்டியலில், 73வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அளவில், இரண்டாவது இடத்தில் உள்ளது.

இவற்றை அடுத்து, ‘எச்.டி.எப்.சி., பேங்க், ஹிந்துஸ்தான் லீவர், இன்போசிஸ், கோட்டக் மகிந்திரா பேங்க்’ ஆகியவையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 316வது இடத்திலும்; ஐ.டி.சி., 480வது இடத்திலும் உள்ளன.

உலகளவிலான இந்த பட்டியலில், முதலிடத்தை, ‘ஆப்பிள்’ நிறுவனமும்; இரண்டாவது இடத்தை, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனமும், மூன்றாவது இடத்தை, அமேசானும் பிடித்துள்ளன. பட்டியலில் உள்ள, 242 நிறுவனங்கள், அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். 51 நிறுவனங்கள் சீனாவையும்; 30 நிறுவனங்கள் ஜப்பானையும் சேர்ந்தவைஆகும்.அரசுக்கு சொந்தமான அல்லது அவற்றால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களின் பட்டியலில், எஸ்.பி.ஐ., வங்கி மட்டுமே இடம்பெற்றுள்ளது.

மூலக்கதை