ஆட்டத்தின் நெருக்கடி என்னைப் பாதிக்கும் அளவுக்கு அனுமதித்து விட்டேன்..! அஸ்வினிடம் மன்னிப்புக் கேட்டார் டிம் பெய்ன்

தினகரன்  தினகரன்
ஆட்டத்தின் நெருக்கடி என்னைப் பாதிக்கும் அளவுக்கு அனுமதித்து விட்டேன்..! அஸ்வினிடம் மன்னிப்புக் கேட்டார் டிம் பெய்ன்

சிட்னி: சிட்னி டெஸ்ட் போட்டியின் பரபரப்பான 5ம் நாள் ஆட்டத்தின் போது அஸ்வின், விஹாரியை வீழ்த்த முடியாமல் ஆஸி. அணி தவித்தது, இதனால் போட்டியே டிரா ஆனது, அப்போது அஸ்வின் பேட்டிங்கில் இருந்த போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், பின்னாலிலிருந்து அஸ்வினை கடுமையாக பேசியது ஸ்டம்ப் மைக்கில் கேட்டது. இந்நிலையில் தான் பேசியதற்கு அஸ்வினிடம் மன்னிப்புக் கேட்டார் டிம் பெய்ன். கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தி உன்னை உன் அணியில் யாராவது மதிப்பார்களா, என்னை மதிப்பார்கள், ஐபிஎல் அணிகள் உன்னை ஏன் எடுக்கத் தயங்குகிறார்கள் என்று தெரியுமா? என்றெல்லாம் டிம் பெய்ன் உளறிக் கொட்டினார். ஒரு கட்டத்தில் அஸ்வின் பேச்சை நிறுத்து இல்லையேல் ஆட்டத்தை நிறுத்துவேன் என்று கூற நேரிட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிம் பெய்ன், “என் நடத்தைகாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு கேப்டனாக நான் வழிநடத்தும் விதத்தில் என்னைப் பெருமையாகக் கருதுபவன் நான். நேற்று மிக மோசமாக நடந்து கொண்டேன். என் தலைமை சரியில்லை. ஆட்டத்தின் நெருக்கடி என்னைப் பாதிக்கும் அளவுக்கு அனுமதித்து விட்டேன். என் அணியின் தரநிலைகளிலிருந்து தாழ்ந்து விட்டேன். நானும் மனிதன் தான், நேற்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கடந்த 18 மாதங்களாக உயர் தரத்தை அமைத்தோம், நேற்று அதில் கறை படிந்து விட்டது. நான் ஆட்டம் முடிந்தவுடனேயே அஸ்வினிடம் பேசினேன். ஆம் பேசிப்பேசி கேட்சை கோட்டை விட்டேன். இருவரும் சிரித்து மகிழ்ந்தோம், அனைத்தும் சுபம். பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்றார்.

மூலக்கதை