சிட்னியில் ‘டிரா’ செய்தது இந்தியா: அஷ்வின் அபாரம் | ஜனவரி 11, 2021

தினமலர்  தினமலர்
சிட்னியில் ‘டிரா’ செய்தது இந்தியா: அஷ்வின் அபாரம் | ஜனவரி 11, 2021

சிட்னி: சிட்னி டெஸ்டில் துணிச்சலாக போராடிய இந்திய அணி, ‘டிரா’ செய்து அசத்தியது. காயத்தை பொருட்படுத்தாது கடைசி வரை துாணாக நின்று ஆடிய அஷ்வின் சக வீரர் விஹாரிக்கு தமிழில் பேசி ஊக்கம் அளித்தார்.  ரிஷாப் பன்ட், புஜாராவின் பொறுப்பான ஆட்டமும் சாதிக்க உதவியது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடந்தது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338, இந்தியா 244 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்த ‛டிக்ளேர்’ செய்தது. பின், 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 98 ரன் எடுத்திருந்தது. புஜாரா (9), ரகானே (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

பன்ட் விளாசல்: ஐந்தாம் நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு 309 ரன்கள் தேவை என்ற நிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் அஜின்கியா ரகானே (4) ஏமாற்றினார். பின் புஜாரா, ரிஷாப் பன்ட் ஜோடி இணைந்து போராடியது. பன்ட் துவக்கத்தில் இருந்தே அதிரடி காட்ட, மறுமுனையில் புஜாரா நிதானமாக விளையாடினார்.  லியான் வீசிய 57வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட பன்ட், 64 பந்தில் அரைசதம் எட்டினார்.

புஜாரா நம்பிக்கை: பொறுப்பாக ஆடிய புஜாரா, லியான் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி இப்போட்டியில் தனது 2வது அரைசதமடித்தார்.  தொடர்ந்து அசத்திய பன்ட், கேமரான் கிரீன், லியான் வீசிய முறையே 77, 78வது ஓவர்களில் தலா 2 பவுண்டரி அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்த போது லியான் ‛சுழலில்’ பன்ட் (97 ரன், 3 சிக்சர், 12 பவுண்டரி) சிக்கினார். கம்மின்ஸ் வீசிய 83வது ஓவரில் ‛ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசிய புஜாரா (77), ஹேசல்வுட் ‛வேகத்தில்’ வெளியேறினார்.

அஷ்வின் அசத்தல்: பின், ஹனுமா விஹாரி, அஷ்வின் ஜோடி அசத்தியது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களின் ‛ஷார்ட் பிட்ச்’ பந்துகளை சாமர்த்தியமாக எதிர்கொண்டார் தமிழகத்தின் அஷ்வின் மறுமுனையில் விஹாரியும் பொறுப்பாக விளையாடினார். இவர்களை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறினர்.

கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில் போட்டியை முடித்துக் கொள்ள இரு அணி வீரர்களும் சம்மதம் தெரிவித்தனர். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்திருந்தது. விஹாரி (23), அஷ்வின் (39) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட், லியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து போட்டி ‛டிரா’ ஆனது. தொடர் 1–1 என, சமநிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருதை ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) வென்றார். நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் ஜன. 15ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது.

முதல் இரு இடத்தில்...

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய சிட்னி டெஸ்ட் ‘டிரா’ ஆனதை அடுத்து, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிப்பட்டியல் வெளியானது. இதில் ஆஸ்திரேலிய (73.8 சதவீதம்), இந்தியா (70.2 சதவீதம்) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன. 0.02 சதவீதம் குறைவாக உள்ள நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.

வெற்றிக்கு சமம்

இந்திய அணி கேப்டன் ரகானே கூறுகையில், ‛‛ஐந்தாம் நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன்,  கடைசி வரை போராட வேண்டும் என்று திட்டமிட்டோம். இதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.  முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியை 338 ரன்களுக்கு ‛ஆல்–அவுட்’ செய்தனர். விஹாரி, அஷ்வின் ‛பேட்’ செய்த விதம் பாராட்டுக்குரியது. அதிவிரைவாக ரன் சேர்த்த ரிஷாப் பன்ட், ஆட்டத்தின் போக்கை மாற்றியது மகிழ்ச்சி. ஒட்டுமொத்தத்தில் திட்டத்தை சரியாக செயல்படுத்தியதால் தான் ‛டிரா’ செய்ய முடிந்தது. இதனை வெற்றிக்கு நிகராக கருதுகிறேன்,’’ என்றார்.

விலகினார்  விஹாரி

சிட்னி டெஸ்டில்  தொடையின் பின் பகுதியில் காயமடைந்த இந்தியாவின் ஹனுமா விஹாரி, துணிச்சலாக பேட் செய்து போட்டி ‘டிரா’ ஆக  கைகொடுத்தார். ‘ஸ்கேன்’ பரிசோதனையில் இவரது காயம் குணமாக நான்கு வாரம் தேவைப்படும் என்பது தெரிய வர, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் (பிரிஸ்பேன் ஜன. 15–19) இருந்து விலகினார். இங்கிலாந்து தொடரிலும் இடம் பெறமாட்டார். இதேபோல இடது கை பெருவிரலில் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜாவுக்குப் பதில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட உள்ளார்.

‛வில்லன்’ டிம் பெய்ன்

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் டிம் பெய்ன் வில்லனாக அமைந்தார். நேற்று, விக்கெட் கீப்பிங்கில் ஏமாற்றிய இவர், ரிஷாப் பன்ட் 3, 56 ரன் எடுத்திருந்த போது கொடுத்த 2 ‛கேட்ச்’ வாய்ப்புகளை வீணடித்தார். பின், விஹாரி 15 ரன் எடுத்திருந்த போது கொடுத்த ‛கேட்ச்சை’ நழுவவிட்டார். இதேபோல அஷ்வின் 15 ரன் எடுத்திருந்த போது கொடுத்த ‛கேட்ச்’ வாய்ப்பை புகோவ்ஸிக்கு மாற்று வீரராக வந்த சீன் அபாட் கோட்டைவிட்டார்.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இந்திய பேட்ஸ்மேன்கள், தோல்வியை தவிர்த்து போட்டியை ‛டிரா’ செய்தனர்.

மூலக்கதை