புஜாரா–ரிஷாப் பன்ட் அபாரம் | ஜனவரி 11, 2021

தினமலர்  தினமலர்
புஜாரா–ரிஷாப் பன்ட் அபாரம் | ஜனவரி 11, 2021

148 ரன்கள்

 

இந்தியாவின் புஜாரா, ரிஷாப் பன்ட் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 4வது இன்னிங்சில், 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடியானது. இதற்கு முன், 1948–49ல் இந்தியாவின் ருசி மோடி, விஜய் ஹசாரே ஜோடி 139 ரன்கள் (எதிர்: விண்டீஸ், இடம்: மும்பை) சேர்த்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

 

 

97 ரன்கள்

 

அபாரமாக ஆடிய இந்தியாவின் ரிஷாப் பன்ட் 97 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். ஏற்கனவே 2018ல் ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின் 4வது இன்னிங்சில் 114 ரன்கள் எடுத்த இவர் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் தோனி (76* ரன், எதிர்: இங்கிலாந்து, 2007, இடம்: லார்ட்ஸ்) உள்ளார்.

 

* ஆஸ்திரேலிய மண்ணில் 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் பன்ட். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஆலன் நாட் (106* ரன், இடம்: அடிலெய்டு, 1975) உள்ளார்.

 

 

6000 ரன்கள்

 

ஸ்டார்க் வீசிய 73வது ஓவரின் 5வது பந்தில் ஒரு ரன் எடுத்த இந்தியாவின் புஜாரா, டெஸ்ட் அரங்கில் 6000 ரன்களை எட்டினார். இவர், 80 டெஸ்டில் (134 இன்னிங்ஸ்) இம்மைல்கல்லை அடைந்தார். இதுவரை இவர், 80 டெஸ்டில், 18 சதம், 27 அரைசதம் உட்பட 6030 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, இந்த இலக்கை அடைந்த 11வது இந்திய வீரரானார்.

 

* குறைந்த இன்னிங்சில் 6000 ரன்களை எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் 6வது இடம் பிடித்தார் புஜாரா. ஏற்கனவே கவாஸ்கர் (117 இன்னிங்ஸ்), கோஹ்லி (119), சச்சின் (120), சேவக் (123), டிராவிட் (125) ஆகியோர் குறைந்த இன்னிங்சில் இம்மைல்கல்லை அடைந்தனர்.

 

 

16,000 ரன்கள்

 

கம்மின்ஸ் வீசிய 83வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய புஜாரா, முதல் தர போட்டியில் 16 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினார். இவர், 207 போட்டியில், 50 சதம், 63 அரைசதம் உட்பட 16,015 ரன்கள் குவித்துள்ளார்.

 

 

131 ஓவர்கள்

 

இந்திய அணி 2வது இன்னிங்சில் 131 ஓவர்கள் ‛பேட்’ செய்தது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் ‛டிரா’வில் முடிந்த போட்டியின் 4வது இன்னிங்சில் இந்திய அணி அதிக ஓவர்கள் ‛பேட்’ செய்த போட்டிகளுக்கான பட்டியலில் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டது. ஏற்கனவே 1979–80ல் டில்லியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டின் 4வது இன்னிங்சில் இந்திய அணி 131 ஓவர்கள் ‛பேட்’ செய்திருந்தது.

 

* கடந்த 1979ல் ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின் 4வது இன்னிங்சில் இந்திய அணி அதிகபட்சமாக 150.5 ஓவர்கள் ‛பேட்’ செய்திருந்தது.

 

* ஆஸ்திரேலிய மண்ணில் ‛டிரா’வில் முடிந்த போட்டியின் 4வது இன்னிங்சில் அதிக ஓவர்கள் ‛பேட்’ செய்த ஆசிய அணிகளுக்கானபட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா. ஏற்கனவே இந்திய அணி 2014–15ல் சிட்னியில் நடந்த டெஸ்டின் 4வது இன்னிங்சில் 89.5 ஓவர்கள் ‛பேட்’ செய்து ‛டிரா’ செய்திருந்தது.

 

* ஆஸ்திரேலிய மண்ணில் 6வது முறையாக 4வது இன்னிங்சில் 130 அல்லது அதற்கு மேலான ஓவர்கள் ‛பேட்’ செய்து டெஸ்ட் போட்டியை ‛டிரா’ செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. கடைசியாக 2012ல் அடிலெய்டில் நடந்த டெஸ்டின் 4வது இன்னிங்சில் 148 ஓவர்கள் ‛பேட்’ செய்த தென் ஆப்ரிக்க அணி, ‛டிரா’ செய்திருந்தது.

 

 

256 பந்துகள்

 

இந்தியாவின் அஷ்வின், விஹாரி ஜோடி 6வது விக்கெட்டுக்கு 256 பந்துகள் சந்தித்து 62 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 4வது இன்னிங்சில், 6வது விக்கெட்டுக்கு அதிக பந்துகளை எதிர்கொண்ட ஜோடி வரிசையில் 4வது இடம் பிடித்தது.

 

முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட், லாங்கர் ஜோடி (353 பந்து, எதிர்: பாகிஸ்தான், 1999), இங்கிலாந்தின் இயான் பெல், கோலிங்வுட் (342 பந்து, எதிர்: தென் ஆப்ரிக்கா, 2010), விண்டீசின் கூப்பர், வில்லியம்ஸ் (292 ரன், எதிர்: இங்கிலாந்து, 1998) ஜோடி உள்ளன.

 

* டெஸ்ட் அரங்கில் 4வது இன்னிங்சில், 6வது விக்கெட்டுக்கு 256 அல்லது அதற்கு மேலான பந்துகளை சந்தித்த இந்திய ஜோடி வரிசையில் அஷ்வின், விஹாரி ஜோடிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

 

முதலிரண்டு இடங்களில் ராகுல், ரிஷாப் (267 பந்து, எதிர்: இங்கிலாந்து, 2018), சச்சின், மோங்கியா (266 பந்து, எதிர்: பாகிஸ்தான், 1999) ஜோடிகள் உள்ளன.

 

 

128 பந்துகள்

 

இந்தியாவின் அஷ்வின் 128 பந்துகளை சந்தித்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 4வது இன்னிங்சில், 7 வது விக்கெட்டுக்கு அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர்கள் வரிசையில் 5வது இடம் பிடித்தார். முதல் நான்கு இடங்களில் தோனி (159 பந்து, எதிர்: இங்கிலாந்து, 2007), ரிஷாப் பன்ட் (146 பந்து, எதிர்: இங்கிலாந்து, 2018), நயன் மோங்கியா (135 பந்து, எதிர்: பாகிஸ்தான், 1999), ஹிர்மானி (133 பந்து, எதிர்: ஆஸ்திரேலியா, 1977) ஆகியோர் உள்ளனர்.

மூலக்கதை