கோப்பை வெல்லும் நேரம் * கங்குலி பாராட்டு | ஜனவரி 11, 2021

தினமலர்  தினமலர்
கோப்பை வெல்லும் நேரம் * கங்குலி பாராட்டு | ஜனவரி 11, 2021

 மும்பை: ‘‘ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி கோப்பை வெல்லும் நேரம் வந்து விட்டது,’’ என கங்குலி தெரிவித்தார்.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய சிட்னி டெஸ்ட் ‘டிரா’ ஆனது. கடைசி நாளில் எப்படியும் இந்தியா வீழ்ந்து விடும் என எதிர்பார்த்த நிலையில், புஜாரா, ரிஷாப் பன்ட், அஷ்வின், விஹாரி இணைந்து விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தி, போட்டி ‘டிரா’ ஆக உதவினர்.

இதுகுறித்து இந்திய அணி ‘ஜாம்பவான்’ சச்சின் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘இந்திய அணியை நினைத்து பெருமையாக உள்ளது. நான்கு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி ‘டிரசிங் ரூமில்’ உற்சாகம் மிகுதியாக இருக்கும்,’ என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர், முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,‘புஜாரா, பன்ட், அஷ்வின் அணியில் இருப்பதன் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்திருப்பர் என நம்புகிறேன். டெஸ்டில் 3வது இடத்தில் களமிறங்கி, கிட்டத்தட்ட 400 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் (லியான், 396 விக்.,) உள்ளிட்ட, உலகத் தரமான பவுலிங் படைக்கு எதிராக தாக்குப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தியது இந்தியா, கோப்பை வெல்லும் நேரம் வந்து விட்டது,’’ என்றார்.

முன்னாள் வீரர் சேவக் கூறுகையில்,‘‘நம்பவே முடியவில்லை, இந்திய அணியை நினைத்து பெருமையாக உள்ளது. மற்றவர்களை விட பன்டை, வித்தியாசமாக ஏன் நடத்த வேண்டும் என்பதை அவர் காட்டி விட்டார். விஹாரி, புஜாரா, அஷ்வின் செயல்பாடு சிறப்பு,’’ என்றார்.

தவிர இந்தியாவின் மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், வாசிம் ஜாபர், பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா என பலர் பாராட்டு தெரிவித்தனர்.

 

பாண்டிங் ‘பல்டி’ 

முன்னாள் கேப்டன் பாண்டிங் (ஆஸி.,) சிட்னி டெஸ்ட் நான்காவது நாளில் கூறுகையில்,‘‘இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில், 400 ரன்னுக்கும் மேல் எடுப்பதெல்லாம் முடியாத காரியம்,’’ என்றார். ஆனால் இந்திய அணி ‘டிரா’ செய்து பதிலடி கொடுத்தது.

இதுகுறித்து பாண்டிங் கூறுகையில்,‘‘நாள் முழுவதும் இந்திய அணி அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடியது பாராட்டத்தக்கது. முதலில் பன்ட்–புஜாரா, அடுத்து அஷ்வின்–விஹாரி இணைந்து ஆஸ்திரேலிய அணியிடம் இருந்து போட்டியை எடுத்துச் சென்று விட்டனர்,’’ என்றார்.

 

ஐ.சி.சி., வாழ்த்து

இந்திய அணி முன்னாள் வீரர் டிராவிட்டுக்கு நேற்று 48வது பிறந்த நாள். இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்ட செய்தியில்,‘டிராவிட்டுக்கு சிறப்பான முறையில் பிறந்தநாள் பரிசு தந்துள்ளது இந்திய அணி. பொறுமை, நிதானத்துடன் இந்தியா சிறப்பாக செயல்பட்டது,’ என தெரிவித்துள்ளது.


விலகினார்  விஹாரி

சிட்னி டெஸ்டில்  தொடையின் பின் பகுதியில் காயமடைந்த இந்தியாவின் ஹனுமா விஹாரி, துணிச்சலாக பேட் செய்து போட்டி ‘டிரா’ ஆக  கைகொடுத்தார். ‘ஸ்கேன்’ பரிசோதனையில் இவரது காயம் குணமாக நான்கு வாரம் தேவைப்படும் என்பது தெரிய வர, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் (பிரிஸ்பேன் ஜன. 15–19) இருந்து விலகினார். இங்கிலாந்து தொடரிலும் இடம் பெறமாட்டார். இதேபோல இடது கை பெருவிரலில் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜாவுக்குப் பதில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட உள்ளார்.

மூலக்கதை