என்ன பேசினார் அஷ்வின் | ஜனவரி 11, 2021

தினமலர்  தினமலர்
என்ன பேசினார் அஷ்வின் | ஜனவரி 11, 2021

சிட்னி: இந்திய அணியின் அஷ்வின், ஹனுமா விஹாரி என இருவரும் தமிழில் பேசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடந்தது. நேற்று ஆஸ்திரேலிய ‘வேகங்கள்’ வீசிய பவுன்சர் பந்துகள் அஷ்வினின் கை, தோள்பட்டை, மார்பு, வயிறு என பல பகுதிகளை தாக்கியது. மனம் தளராமல் போராடிய இவர், தொடை காயத்தால் அவதிப்பட்ட சக வீரர் விஹாரிக்கும் ஊக்கம் அளித்தார்.  அவ்வப்போது தமிழில் பேசி கலக்கினார். ஆந்திராவை சேர்ந்த விஹாரிக்கும் தமிழ் தெரியும் என்பதால்,‘ பந்து வெளிய தான் போகும், கவலைப்படமா ஆடு மாமா... ஆடு,’ என்றார் அஷ்வின். இதைக் கேட்ட விஹாரி தலையசைத்துக் கொண்டே பேட்டிங் செய்தார். அப்போது ஸ்டார்க் வீசிய பந்து ஸ்டம்சை விட்டு விலகியே சென்றது.

மற்றொரு முறை,‘ஆளுக்கு பத்து பத்து பந்தாக பிடிப்போம், மீதி நாற்பது பந்து தான்,’ என பேசினார். கடைசிவரை நிலைத்த அஷ்வின், ஹனுமா விஹாரி ஜோடி 42.4 ஓவர்கள் தாக்குபிடித்து, போட்டியை ‘டிரா’ செய்தது. அஷ்வின், விஹாரியின் இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

 

ஆஸி., கேப்டனுக்கு பதிலடி

விஹாரியிடம் தமிழில் பேசிய அஷ்வின், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆங்கிலத்தில் பதிலடி கொடுத்தார். அவரை சுற்றி நின்ற கேப்டன் பெய்ன், லபுசேன், வேட் என பலரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுகவனத்தை சிதறடிக்க முயற்சித்தனர். ஒருமுறை பெய்ன்,‘நான்காவது டெஸ்ட் நடக்க உள்ள பிரிஸ்பேன் காபா மைதானத்துக்கு வா பார்ப்போம்,’ என  சீண்டினார்.இதற்கு அஷ்வின் ‘நீ இந்தியா வா பார்ப்போம், அது தான் உனக்கு கடைசி தொடராக இருக்கும்,’’ என்றார்.  தொடர்ந்து பெய்ன் பேச முயற்சித்த போது அம்பயரிடம் அஷ்வின் புகார் தெரிவித்து, பந்தை எதிர்கொள்ள மறுத்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த பெய்ன், அடுத்த சில நிமிடத்தில் விஹாரி கொடுத்த கேட்ச்சை கோட்டை விட்டார்.

 

மனைவி பெருமிதம்

அஷ்வின் மனைவி பிரீத்தி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘முதல் நாள் இரவு கடும் முதுகுவலியுடன் தான் படுக்கச் சென்றார். காலையில் எழுந்த போது, அவரால் நேராக நிற்கக் கூட முடியவில்லை. குனிந்து ‘ஷூவின் லேசை’ கூட கட்ட முடியவில்லை. ஆனால் களத்தில் போராடி போட்டியை ‘டிரா’ செய்துள்ளார். வியப்பாக உள்ளது,’ என தெரிவித்தார்.

மூலக்கதை