டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 15ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்: ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட உள்ளதாக அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 15ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்: ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட உள்ளதாக அறிவிப்பு

புதுடெல்லி: ‘விவசாயிகள் உரிமைகள் தினம்’ என்ற பெயரில், டெல்லியில்  போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் 15ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடக்கிறது. அன்றைய தினம் மாநில ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட  போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, கடந்த நவ. 26ம் தேதி முதல் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே, விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 8 கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. கடைசியாக நடந்த கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சங்க தலைவர்கள், ‘புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம்.

எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாமல் போனால், ஏற்கனவே  அறிவித்தது போல் குடியரசு தினத்தன்று பிரமாண்டமான முறையில் டிராக்டர் பேரணி  நடத்தப்படும். ’ என்றனர். அதனால் வரும் 15ம் தேதி 9ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

இன்றைய நிலையில், டெல்லியின் எல்லையில் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.

இதற்கிடையில், 9ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ள அதே நாளில், நாடு முழுவதும் ‘விவசாயிகள் உரிமைகள் தினம்’ கடைபிடிக்கப்படும் என்றும், அன்றைய தினம் மாநில ஆளுநர் மாளிகைகள் முற்றுகையிடப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ‘மத்திய அரசு தனது பொறுப்பில் இருந்து ஒதுங்கி நிற்கிறது.

போராட்டம் நடத்தும் விவசாயிகளை உச்சநீதிமன்றத்துக்கு செல்ல சொல்கிறது. நாட்டில் இதுபோன்ற மத்திய அரசாங்கம் இதுவரை சொன்னதில்லை.



விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெறுவதற்கு பதிலாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக ‘பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை, ஒத்திவைப்பு ஒத்துவைப்பு’ என்று கூறிவருகின்றனர். நாட்டின் 73 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற இரக்கமற்ற அரசாங்கம் எப்போதும் அமைந்ததில்லை.

மத்திய அரசின் செயல்பாடுகள் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியை போன்று உள்ளது. 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் குளிர்கால மழை மற்றும் ஆலங்கட்டி மழை மற்றம் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லும் இதுவரை பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இது, நாட்டிற்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இந்த போராட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் மத்திய அரசின் சந்தர்ப்பவாதிற்கும் இடையில் நடக்கிறது. விவசாயிகள் நாட்டின் நம்பிக்கை விளக்கு; ஆனால், சில முதலாளிகளின் நலனுக்காக மத்திய அரசாங்கம் செயல்படுகிறது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அதன் மக்களை உச்சநீதிமன்றத்திற்குச் செல்லுங்கள் என்றுகூறி தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. அதேபோல் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டு வருகின்றது.

இந்த மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களும் உச்சநீதிமன்றத்தால் இயற்றப்படவில்லை. இவை பிரதமர் மோடி அரசால் நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.



மத்திய அரசு தனது பொறுப்பை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும் போது, நாட்டின் கொள்கை முடிவுகளை எடுக்க போது யாருடைய பொறுப்பில் வருகிறது? எனவே போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ‘விவசாயிகள் உரிமை தினம்’ என்ற பெயரில் வரும் 15ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம். அன்றைய தினம் பேரணி மற்றும் தர்ணா போராட்டங்கள் நடக்கும்.

குறிப்பாக அந்தந்த மாநில ஆளுநர் மாளிகை முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

'சுப்ரீம் கோர்ட்டில் நாளை வழக்கு விசாரணை'
வேளாண் சட்டங்களையும் திரும்பபெற வலியுறுத்தி  டெல்லியிலும், டெல்லி எல்லைகளிலும் விவசாயிகள் கடந்த 47 நாட்களாகப்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிங்கு எல்லையில்  போராடி வந்த பஞ்சாப் மாநிலம் பதேகார்க் பகுதியைச் சேர்ந்த விவசாயி  அமரீந்தர் சிங் (42) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே  வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், வேளாண்  சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் உயரும் என்றும், விவசாயம் மேம்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகளின்  போராட்டம் தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம்  நாளை (ஜன.

11) விசாரிக்கிறது.

15ம் தேதி 9ம் கட்ட பேச்சுவாரத்தை நடக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால் போராட்டம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

.

மூலக்கதை