வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை

வாஷிங்டன்: வன்முறையை தூண்டும் பதிவுகளை அதிபர் டிரம்ப் வெளியிட்டதால் அவரது டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. மேலும், பேஸ்புக் நிறுவனம் தாங்களும் நிரந்தரமாக முடக்கிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு ஆளானது. இந்த வன்முறை சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

பலர் காயமடைந்தனர். மைக்ரோ-பிளாக்கிங் வலைத்தளமான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் டிரம்பின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.



வன்முறை மேலும் பரவிவிடக் கூடாது என்ற காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே, டிரம்பின் கணக்குகளை டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன காலவரையின்றி தடையை நீட்டித்தன.

இப்போது டிரம்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக முடக்கிவிட்டது. ஏனெனில் டிரம்ப் பதிவிடும் ஒவ்வொரு பதிவாலும், அமெரிக்காவில் மேலும் வன்முறைக்கு தூண்டப்படலாம் என்ற அச்சத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கில் பதிவான டுவிட்டுகள் மற்றும் குறிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆட்சேபனைக்குரிய பதிவுகள் இருந்ததால், அவரது கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

வன்முறை சம்பவங்களுக்கு பின்னணியில் இருந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று எங்களது விதிமுறையில் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால், அதிபர் டிரம்ப் இனி தனது கணக்கைத் திறந்து கூட பார்க்க முடியாது.

அவரது டுவிட்டுகள் மற்றும் சுயவிபர புகைப்படம் ஆகியன அகற்றப்பட்டுள்ளன. இவரது கணக்கை 88. 7 மில்லியன் பேர் பின்தொடர்ந்தார்கள்.

ஏற்கனவே தேர்தல் பிரசார காலங்களில் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை டிரம்ப் பதிவிட்டதால், அவை அகற்றப்பட்டன. டிரம்பின் போலி மற்றும் வன்முறையை தூண்டும் பதிவுகள் நிறுத்தப்படாவிட்டால், அவர் தனது கணக்கை நிரந்தரமாக மூடுவோம் என்று பேஸ்புக் நிறுவனமும் எச்சரித்துள்ளது.

டிரம்பின் பதவிக்காலம் முடிய இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் மூலம் அதிகாரம், பதவி பறிபோன நிலையில், தற்போது அவரது தகவல் தொடர்பு தளங்களும் முடக்கப்பட்டதால் டிரம்ப் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

.

மூலக்கதை