புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்

வாஷிங்டன்: கடந்த நவ. 3ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது அதிபர் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் ெவற்றி பெற்றார்.

எனினும், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி வரும் டிரம்ப், தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். வரும் 20ம் தேதி புதிய அதிபராக ஜோ பிடன் பதவியேற்கும் நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தலைநகர் வாஷிங்டனில் போராட்டம் நடத்துமாறு தனது ஆதரவாளர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று நேற்று ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் நுழைந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தின்போது, தேர்தல் முடிவின் அதிகாரபூர்வ அறிவிப்பு தொடர்பான நாடாளுமன்ற மேலவையான செனட் சபை, கீழவையான பிரதிநிதிகள் சபையின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

திடீரென வன்முறைக் கும்பல் உள்ளே நுழைவதை அறிந்ததும், நாடாளுமன்ற வளாகத்தின் இரு அவைகள் மற்றும் பிற கட்டிடங்களில் இருந்தவர்களை போலீசார் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர். இருந்தும், எம்பிக்கள் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்ற அந்தக் கும்பலை போலீசார் தடுத்து நிறுத்தி சுட்டதில் டிரம்ப் ஆதரவாளர்களில் ஒருவரான பெண் பலியானார்.

மேலும், இந்த வன்முறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடாளுமன்ற வளாகப் பகுதி முடக்கப்பட்டது.

வன்முறை கும்பலை அந்தப் பகுதியிலிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த கலவர சம்பவத்துக்கு முன்னாள் அதிபர்கள் ஜிம்மி கார்ட்டர், பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல், பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வரும் 20ம் தேதி நிகழவிருக்கும் ஆட்சி மாற்றம் முறையானதாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘சட்டம் ஒழுங்கின் தேசமாக அமெரிக்கா இருக்க வேண்டும். தற்போது தேர்தல் முடிவுகள் குறித்த சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் 20ம் தேதி புதிய நிர்வாகம் அமைக்கப்படும். சுமூகமான, ஒழுங்கான, தடையற்ற அதிகார மாற்றத்தை உறுதிசெய்யும் விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறேன்.

நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுக்கிறேன். நாட்டின் ஜனாதிபதியாக பணியாற்றியதை எனது வாழ்நாளின் மரியாதைக்கு உரியதாக உணர்கிறேன்.

எனது அற்புதமான ஆதரவாளர்களின் ஏமாற்றம் எனக்கு வருத்தம் அளிக்கிறது.

ஆனால், எங்களது பயணம் தொடரும்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தை மீறியதற்காக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அமெரிக்காவின் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடினேன்.

தேர்தல் முடிவுகள் குறித்து சட்ட வழிகளை தீவிரமாக கவனித்து வருகிறேன். நாட்டின் தேர்தல் சட்டங்களை திருத்த வேண்டும்.

வாக்காளர்களின் அடையாளம், தகுதி ஆகியவற்றை சரிபார்க்க எதிர்கால தேர்தல்களில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். டிரம்ப், அதிபராக இன்னும் 13 நாட்களே பதவி வகிக்க உள்ள நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட வன்முறை அமெரிக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


.

மூலக்கதை